மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் முக்கிய சாலை சந்திப்புகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு பணி என்ற வகையில் அக்னி பாதை திட்டம் பாதுகாப்புத்துறை சார்பில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக பீகார் உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் டெல்லி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டு வன்முறை என்பது வெடித்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது போல நேற்று சென்னை போர் நினைவு சின்னம் அருகே 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு சென்னை காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து சந்திப்புகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று போர் நினைவு சின்னம் அருகே திடீர் போராட்டம் நடைபெற்ற நிலையில் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை, கொடிமர இல்லம் சாலை தொடங்கி போர் நினைவுச்சின்னம் வரை ஆர்பிஐ சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்ல கூடிய வாகனங்கள், வீடுகள் அருகில் இருக்கக்கூடிய நபர்கள், 108 போன்ற அவசர தேவைகளுக்காக செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் முறையான காரணம் இருந்தால் மட்டுமே போலீசார் போக்குவரத்து தடை செய்யப்பட்ட சாலைகளில் பொதுமக்களை அனுமதிக்கின்றனர்.
மேலும் போக்குவரத்து தளமாக இருக்கக்கூடிய கோயம்பேடு பேருந்து நிலையம் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள், சென்னையின் பிரதான சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை காமராஜர் சாலை அண்ணா சாலை ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM