வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கவுகாத்தி-வட கிழக்கு மாநிலமான அசாமில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோர் எண்ணிக்கை, 62 ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவு
அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. அசாமில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு, நேற்றும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பர்பேடா, தராங், கரீம்கஞ்ச், சோனிட்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் முழுமையாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. நேற்று மட்டும் இந்த மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக எட்டு பேர் பலியாகினர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை, 62 ஆக அதிகரித்துள்ளது. பல கிராமங்கள், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், படகு மற்றும் ஹெலிகாப்டர்கள் வாயிலாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1.50 லட்சம் பேர்
மாநிலம் முழுதும், 1.50 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோபிலி, பிரம்மபுத்ரா, ஜியா பராலி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. வெள்ள பாதிப்பு பகுதிகளை, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆய்வு செய்தார். அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். திரிபுரா, மேகாலயா மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது.
Advertisement