டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இரண்டு தொகுதியில் போட்டியிடுவதை தடுக்க பாஜக அரசு சதி வேலைகளை செய்து வருவதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பின்தொடர அமலாக்கத்துறைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட விடாமல் தடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கிறது. இந்த தந்திரம் மற்றும் சதியுடன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை பின்தொடர அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் இதுவரை நாம் பார்த்திராத ஒன்று. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையானது காங்கிரஸ் கட்சியின் சொத்து; அதை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அதைப் பாதுகாக்கத் தவறினால், அது காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தின் நோக்கத்தையை சிதைத்துவிடும். அவர்கள் (பாஜக தலைவர்கள்) நாட்டு மக்களின் முன் சோனியா மற்றும் ராகுலின் நற்பெயரை களங்கப்படுத்த இவ்வாறு செய்து வருகின்றனர். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள், அவர்களின் தீய நோக்கங்களைப் புரிந்து கொள்வார்கள்’ என்றார்.