காபூல்: ஆப்கனில் பல ‘டிவி’ நிறுவனங்களில் தொகுப்பாளராகவும், செய்தியாளராகவும் பணியாற்றியவர், இன்று வீதியில் அமர்ந்து சமோசா விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஆப்கனில், கடந்த ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்தது முதல், பொருளாதார நிலை மோசமடைந்து வருகிறது. உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து, விலைவாசி உயர்ந்துள்ளது. பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை தலிபான்கள் களையெடுத்து வருகின்றனர். இதனால் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான், மூசா முகமது. பல ‘டிவி’ நிறுவனங்களில் தொகுப்பாளராகவும், செய்தியாளராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.
இந்நிலையில் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். வேறு நிறுவனங்களிலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் குடும்பத்தையும், நோய்வாய்ப்பட்ட தாயையும் காக்க வேண்டி வீதி வீதியாக சமோசா உள்ளிட்ட உணவு வகைகளின் விற்பனை செய்யத் துவங்கி விட்டார். இவரது பரிதாப நிலை, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதைப் பார்த்த ஒருவரது முயற்சியால், மூசா முகமதுவுக்கு வானொலி நிலையத்தில் வேலை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆப்கனில் தலிபான் ஆட்சியில் பத்திரிகையாளர்களின் வாழ்க்கை மிக மோசமாகி விட்டதாக, காபூல் பல்கலை பேராசிரியர் கபிர் ஹக்மால் தெரிவித்துள்ளார்.
Advertisement