புதுடெல்லி,
ஆசியா ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் எதிரெதிர் அணியாக களம் காணும் ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை மீண்டும் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) திட்டமிட்டு வருகிறது.
அதன்படி, 2023ம் ஆண்டு அட்டவணையில் ஆப்ரோ-ஆசிய கோப்பையை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை. நாங்கள் இன்னும் திட்டமிட்டு வருகிறோம், இது குறித்த திட்டம் இரு வாரியங்களுக்கும் சமர்ப்பிக்கப்படும்.
ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சிறந்த வீரர்கள் ஆசிய லெவன் அணியில் விளையாட வேண்டும் என்பதே எங்களது திட்டம். திட்டம் இறுதி வடிவத்தை எட்டிய பின், விளம்பரதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் என அடுத்தகட்ட நகர்வு இருக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பு அமையும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச வீரர்களுடன் இணைந்து ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார்கள்.
முதன்முறையாக 2005ம் ஆண்டு ஆப்ரோ-ஆசிய கோப்பை போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து 2007ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்பின் இன்னும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.