காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக (சிக்ரி) இயக்குநர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, ஷ்ரவந்தி, வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை, அதே வெப்ப நிலை யில் உறிஞ்சும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம் கோவையைச் சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி கூறியதாவது: சிக்ரி நிறுவனத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு, 19 கண்டுபிடிப்புகளை தேர்வு செய்துள்ளோம். இதில் முதல் வெற்றியாக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம்.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு குளிர்விக்கப்பட்டு, மீண் டும் அதிக அழுத்தம் மற்றும் வெப் பத்தில் திரவ நிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவினங்கள் அதிகம்.
அந்த செலவினத்தை 30 முதல் 40 சதவீதம் குறைக்கும் வகை யில், எங்களது புதிய தொழில் நுட்பம் இருக்கும். அதன்படி, தொழிற்சாலைகளில் 70 டிகிரி வெப்பத்தில் வெளியேறும் கார் பன்டை ஆக்சைடை, அதே வெப்ப நிலையில் பயனுள்ள திடநிலை யாக மாற்றி பயன்படுத்த முடியும். இதன் மூலம் வெப்பமயமாதல் குறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை சிமென்ட் ஆலை, அனல்மின் நிலையங்கள், இரும்புத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பயன் படுத்த முடியும் என்றார்.