இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு, கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால், கொரோனா நான்காம் அலை தொடங்கி விட்டதா என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 899 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,96,692 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,855 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,518 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,99,363 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,96,14,88,807 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,24,591 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.