உக்ரைனில் இருந்து உணவு தானிய ஏற்றுமதிக்கான பாதுகாப்பான வழித்தடத்தை ரஷியா உருவாக்க வேண்டும் – ஜெர்மனி கோரிக்கை

பெர்லின்,

உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் சண்டை தீவிரமடைந்து வருகிறது. அம்மாகாணத்தில் உள்ள செவ்ரொடோன்ஸ்க் நகரில் உச்சபட்ச சண்டை நீடித்து வருகிறது. போரில் செவ்ரொடோன்ஸ்க் நகரில் சண்டையிட ரஷியா அதிக அளவில் ரிசர்வ் படைகளை அனுப்பி வைத்துள்ளது.

உக்ரைன் ரஷியா போரால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் உக்ரைனின் முக்கிய துறைமுகங்களை ரஷியா முடக்கியுள்ளதால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உணவு தானியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உணவு நெருக்கடி ஏற்பட காரணமான ரஷியா மீது ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் கண்டனத்தை தெரிவித்தார். தானிய ஏற்றுமதியைத் தடுப்பதற்காக ரஷியாவை அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

கருங்கடலில் உள்ள முக்கிய துறைமுகங்களில் உக்ரேனிய தானிய ஏற்றுமதியை பாதிக்கும் முற்றுகையை ரஷியா நிறுத்த வேண்டும்.

உகரைன் விவகாரத்தில் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று ரஷியா நம்ப வேண்டும். இந்த பிரச்சினைகள் அனைத்தும் தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளன, ஆனால் அவற்றைப் பற்றிய பொது ஊகங்கள் இந்த கடினமான பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது. இது தொடர்பாக கூடுதலாக பேசி மேலும் சிக்கலை விரிவுபடுத்த மாட்டேன்.

கருங்கடலில் இருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு பாதுகாப்பான வழித்தடத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.பாதுகாப்பான போக்குவரத்தை ரஷ்யா செயல்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் ரஷ்யா அத்தகைய பாதையை படையெடுப்பிற்கு பயன்படுத்த மாட்டோம் என்று நம்பகமான உத்தரவாதம் அளிக்க வேண்டும். தானியக் கப்பல்கள் உக்ரேனிய துறைமுகங்களை விட்டு வெளியேறுவதும், ரஷ்ய போர்க்கப்பல்கள் துறைமுகங்களுக்கு தாக்குதலுக்காக செல்வதும் ஒன்றாக செயல்பாட்டில் இருக்க முடியாது.

உக்ரைனிலிருந்து ஏற்றுமதி வழித்தடத்தை நிறுவுவதற்கான ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் முயற்சிகளை ஜெர்மனி ஆதரிக்கிறது. உலக தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் அவசியம். புதினுடன் நான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவேன்.

உக்ரைன் நிலத்தை அபகரிப்பு செய்துவிட்டால், அதன்பின்னர் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்று புதின் நம்புகிறார். ஆனால் அவரால் உக்ரைன் நிலத்தை அபகரிக்க முடியாது. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முயற்சிகளை ஜெர்மனி ஆதரிக்கும்.

இவ்வாறு ஜெர்மன் அதிபர் கூறினார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதிலிருந்து, ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் ரஷிய அதிபர் புதினுடன் பேசி, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.