ஜூன் 2-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டார். வீட்டிலிருந்தபடியே கொரோனா மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில், ஜூன் 12-ம் தேதி சோனியா காந்திக்கு திடீரென மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சோனியா காந்தியின் உடல் நலம் சீராக இருப்பதாகவும், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலோட்டமாகத் தெரிவித்தார்.
சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சை குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகாமல் இருந்துவந்த நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் சோனியா காந்தி உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “ காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை் தொடர்ந்து, மூக்கிலிருந்தும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 12-ம் தேதி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதில், அவரின் சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன், பூஞ்சை தொற்றுக்கும் சேர்த்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்துவருகின்றனர்” என கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில், மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று தாய் சோனியா காந்தியை கவனித்து வந்தனர். குறிப்பாக, ராகுல்காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாகத்துறையின் தொடர் விசாரணையில், கடந்த மூன்று நாள்களாக பல மணிநேரம் ஆஜராகி வந்தார். அதேசமயம் மருத்துவமனைக்கும் சென்றுவருவதுமாக இருந்தார்.
ஏற்கெனவே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியும் ஆஜராக வேண்டும் என கடந்த ஜூன் 8-ம் தேதி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், கொரோனா தொற்றால் விசாரணைக்கு ஆஜராகும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் தரப்பிலிருந்து கோரப்பட்டது. அதையடுத்து, ஜூன் 23-ம் தேதி சோனியா காந்தி விசாரணைகு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தேதியை ஒத்திவைத்து நோட்டிஸ் அனுப்பியது.
இந்த சூழ்நிலையில்தான், சோனியா காந்திக்கு சுவாசப் பாதையில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, சோனியா காந்தி உடல்நிலை காரணமாக மீண்டும் கால அவகாசம் கேட்க முடிவெடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. அதேசமயம், ஜூன் 20-ம் தேதி ராகுல்காந்தி மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சுவாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சைத் தொற்றிலிருந்து சோனியா காந்தி மீண்டு வருவதாகவும், அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் டெல்லி கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.