எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் டீ, பாண் பரிமாறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
இலங்கையில் கடுமையான உணவு, எரிபொருள், மருந்துகள் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொசான் மகாநாம (Roshan Mahanama), கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு தேநீர் மற்றும் பாண் பரிமாறும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டில் டொலர்களே இல்லாத நிலை உள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கு பொது மக்களுக்கு முன்னால கிரிக்கெட் வீரர் உதவி செய்கிறார்.
அதன் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த அவர், “வார்ட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தவைச் சுற்றியுள்ள பெட்ரோல் வாங்க வரிசையில் உள்ள மக்களுக்கு இன்று மாலை சமூக உணவுப் பகிர்வின் குழுவினருடன் நாங்கள் தேநீர் மற்றும் பாண்களை வழங்கினோம்.
வரிசைகள் நாளுக்கு நாள் நீளமாகி வருகின்றன, மேலும் வரிசையில் இருப்பவர்களுக்கு பல உடல்நல ஆபத்துகள் இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய பொலிஸாரையும் படையினரையும் இலங்கை அனுப்பியுள்ளது.
மேலும், போக்குவரத்தை குறைப்பதற்கும், எரிபொருளின் கையிருப்புகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தது.
We served tea and buns with the team from Community Meal Share this evening for the people at the petrol queues around Ward Place and Wijerama mawatha.
The queues are getting longer by the day and there will be many health risks to people staying in queues. pic.twitter.com/i0sdr2xptI— Roshan Mahanama (@Rosh_Maha) June 18, 2022
“தயவுசெய்து, எரிபொருள் வரிசைகளில் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளுங்கள். போதுமான பானம் மற்றும் உணவைக் கொண்டு வாருங்கள், உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உங்களுக்கு அருகில் உள்ள நபரைத் தொடர்புகொண்டு ஆதரவைக் கேளுங்கள் அல்லது 1990-க்கு அழைக்கவும். இந்த கடினமான காலங்களில், நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று ரொசான் மகாநாம வலியுறுத்தினார்.