ஒற்றைத் தலைமை விவகாரம்: சமரச முயற்சியில் மூத்த தலைவர்கள்!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, செங்கோட்டையனும், தம்பிதுரையும் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு வந்திருக்கின்றனர்.
அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ், ஆர்.பி உதயகுமார், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
“என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத் தான்!” – முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்
எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், “ஒற்றைத் தலைமை விவகாரத்தில் என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத் தான். கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவு அவருக்குத் தான் இருக்கிறது. அதனால், நான் அவர் பக்கம்தான்” என்று செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.
“எடப்பாடியாக்கு ஓ.பி.எஸ் விட்டுக்கொடுக்க வேண்டும்!” – முன்னாள் அமைச்சர் சிவபதி
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்று ஆறாவது நாளாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஒருபுறமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒருபுறமும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை வருகின்றனர்.
`ஒற்றைத் தலைமை வேண்டாம்… கட்சி இரட்டைத் தலைமையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது’ எனப் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரையிலும் கருத்து தெரிவிக்காமலிருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சுமுக முடிவு காண இருதரப்புக்கும் ஆதரவாக இருக்கக் கூடிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்தித்து மூத்த நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
காலை முதலே கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவபதி, “4 ஆண்டுகளாகச் சிறப்பாக ஆட்சி செய்த எடப்பாடியாக்கு ஓ.பி.எஸ் விட்டுக்கொடுக்க வேண்டும். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளிப்பது நல்லது” எனத் தெரிவித்தார்.