ஓ.பி.எஸ்-ன் இன்னொரு முகத்தை தமிழகம் பார்க்கப் போகிறது: நேரில் சந்தித்த புகழேந்தி பேட்டி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், பெங்களூரு புகழேந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ஓ.பி.எஸ்-ன் இன்னொரு முகத்தை தமிழகம் பார்க்கப் போகிறது” என்று கூறினார்.

ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் தங்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் உடனான சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது: “கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. அரசியலில் ஒரு சர்வாதிகாரி போல் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சியை கொடுத்தார்.ஆனால், அவர் விசுவாசமாக இருக்கவில்லை.

மனதிற்குள் காழ்புணர்ச்சியை வைத்துக்கொண்டு எங்களை போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் 4 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்தான் பழனிச்சாமி.

இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் பழனிசாமி வெளியே போய் நின்றால் 500 ஓட்டுகள்கூட வாங்க முடியாது. எதிர்க்கட்சிப் பதவியை வாங்கி எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருடம் ஆகிறது. திமுகவில் ஊழலைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிச்சாமி தயாராக உள்ளாரா? பாஜக தலைவர் அண்ணாமலையை எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லும் சூழலை உருவாக்கியவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.

எடப்பாடி பழனிச்சாமி போன்ற முட்டாள்களை பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்தமாட்டார். அதிமுகவை விட்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வெளியேற வேண்டும். இரட்டைக் குழல் துப்பாக்கி, இரட்டை கோபுரம் என்று அப்போது கூறிய ஜெயக்குமார். இப்போது எப்படி ஒற்றைத் தலைமையைப் பற்றி பேசுகிறார் என புரியவில்லை.

சேலம் மாவட்ட அதிமுகவை மாற்ற எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி. பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் நடத்த முடியாது. தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை; ஓ.பன்னீர்செல்வம்தான் உள்ளார். ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை. அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும். அப்படி நீக்குவதற்கு கட்சியின் விதிகளின் இடமிருக்கிறது. இனி ஓ.பி.எஸ்-ன் இன்னொரு முகத்தை தமிழகம் பார்க்கப் போகிறது” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.