பாதுகாப்புப் படைக்கு `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வாழ்வாதாரம், ராணுவ கனவுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா சமீபத்தில் அக்னிபத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஒரு அக்னிவீரன் ராணுவப் பயிற்சி பெற்று, நான்கு வருடங்கள் கழித்து பணியிலிருந்து வெளியேறும்போது, ரூ.11 லட்சம் பெற்று, அக்னிவீரன் பேட்ஜ் அணிந்து கொள்வார். பா.ஜ.க அலுவலகத்துக்கு நான் செக்யூரிட்டியை அமர்த்த விரும்பினால், அக்னிவீரனுக்கு முன்னுரிமை கொடுப்பேன்” என்று கூறினார்.
ராணுவ வீரர்களை செக்யூரிட்டி வேலையில் அமர்த்துவதாக பா.ஜ.க தலைவர் பேசியதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நாட்டின் இளைஞர்கள் மற்றும் ராணுவ வீரர்களை அவமரியாதை செய்ய வேண்டாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டின் இளைஞர்கள் உடல் தகுதித் தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற இரவு பகலாக கடினமாக உழைக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இராணுவத்தில் சேர்ந்து தங்கள் வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அவர்களை பா.ஜ.க-வினர் தங்கள் கட்சி அலுவலகத்தின் காவலர்களாக்க விரும்புகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
கைலாஷ் விஜயவர்கியாவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்னிபத் திட்டம் குறித்த அனைத்து சந்தேகங்களையும் பா.ஜ.க-வின் கைலாஷ் விஜயவர்கியா தீர்த்துவிட்டார்” எனப் பதிவிட்டுள்ளது.
அதேபோல ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தனது பிளாக்கிங் தளத்தில், “பி.ஜே.பி தலைவர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு சௌகிதார்களாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த வீரர்களை அமர்த்துவோம் என்று கூறுகிறார்கள். மரியாதைக்குரிய ராணுவ வீரர்களுக்கும், நாட்டை காக்கும் வீரர்களுக்கும் மோடியின் கட்சி அளிக்கும் கண்ணியம் இதுதானா? நாட்டில் இதுபோன்ற ஆளும்கட்சி இருப்பது வருத்தமளிக்கிறது” என்று எழுதியிருக்கிறார்.
மேலும, சிவசேனாவின் ராஜ்ய சபா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “விஜய்வர்கியாவின் கருத்து சீருடையில் இருப்பவர்களின் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்துகிறது” என விமர்சித்திருக்கிறார்.