காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மேகேதாட்டு அணைதிட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ள முதல்வர், இது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு விரைவில் டெல்லி செல்லும் என்றும் அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காவிரிப் பிரச்சினை, தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும். காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில், திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும். தமிழகத்தின் உரிமையை நிச்சயம் நிலைநாட்டுவோம்.

விவசாயிகளுக்கு துரோகம்

காவிரியில் தமிழகத்தின் உரிமையைத் தடுக்கவும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தைக் குறைக்கவும் கர்நாடக அரசு தொடர்ந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டம். இது, தமிழக விவசாயிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். மேலும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும்கூட.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோதுகூட, இது தொடர்பாக வலியுறுத்தி உள்ளேன். மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்பதும், மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்பதும் தமிழக அரசின் இறுதியான நிலைப்பாடு.

மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கர்நாடக அரசு தனது பிடிவாதமான செயல்களில் இருந்து பின்வாங்கவில்லை.

இதற்கிடையில், கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி பிரதமருக்கு அனுப்பிய அவசரக் கடிதத்தில், “மேகேதாட்டு திட்ட அறிக்கை குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட மத்திய ஜல்சக்தி துறைக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தேன்.

இந்நிலையில், மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் கூறியிருப்பது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

சட்டவிரோதமானது…

இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்ச நீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது, அதை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், இதுகுறித்து விவாதிப்போம் என்று ஆணையத் தலைவர் சொல்வது சட்டவிரோதமானது.

இந்த விவகாரத்தில் தமிழக மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் குழு டெல்லிக்குச் சென்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, இது தொடர்பாக வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவினர் டெல்லி சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லிக்குச் செல்லும்.

மத்திய அரசு பணியக்கூடாது

இதற்கிடையில், டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு மத்திய பாஜக அரசு ஒருபோதும் பணியக்கூடாது. கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணையைக் கட்ட விடமாட்டோம். காவிரியின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.