சுங்குடி காட்டன் சேலை உற்பத்தியாளர்களின் அடுத்த நகர்வு பட்டுச்சேலையில் பரவச புள்ளிகளாய் விரிகிறது. சேலையின் உடல் முழுவதும் அள்ளித்தெளித்த புள்ளிகளாய் நிறைந்திருக்க அதை கட்டும் போது புள்ளிகள் கடலாய் பரந்து பார்ப்போரை அதிசயிக்க செய்கிறது.
இயற்கை முறையில் பட்டுச்சேலையை உருவாக்க ஒரு மாதமாகும் என்கிறார் மதுரை சுங்குடி ஜவுளி உற்பத்தி விற்பனையாளர் சங்கத்துடன் இணைந்த ‘பெடரேஷன் ஆப் டை அன்ட் டை’ செயலாளர் ரமேஷ்.
எங்கள் சங்கத்தில் 260 பேரும் பெடரேஷனில் 70 பேரும் இணைந்துள்ளோம். கையால் பிரிண்ட் செய்யும் டெக்ஸ்டைல் துணிகளுக்கு மத்திய அரசு நிறைய பயிற்சி அளிக்கிறது. நிறமற்ற, டிசைன்கள் அற்ற காட்டன் சுங்குடி சேலையில் இயற்கை சாயமேற்றி முடிச்சுகள் இட்டு புள்ளிகள் வடிவ டிசைன்களை உருவாக்குகிறோம். சுரிதார், கவுன், ஆண்களுக்கான சர்ட், அலைபேசி பவுச் என புதுமைகளை செய்துள்ளோம்.புதுமையாக சில்க் சேலையில் முடிச்சுகள் இட்டு டிசைன்கள் உருவாக்குகிறோம்.
காட்டன் சேலையில் கையால் வேகமாக முடிச்சுகள் இடலாம். ஒரு நாளைக்கு 500 முடிச்சுகள் வீதம் 15 நாட்களில் ஒரு சேலையில் 4000 முதல் 10ஆயிரம் முடிச்சுகள் இட்டு புள்ளிகளை உருவாக்கலாம். பட்டுச்சேலையில் முடிச்சு இடும் போது வழுக்கும் என்பதால் ஒருவர், மாதத்திற்கு ஒரு பட்டுச்சேலை மட்டுமே தயாரிக்க முடியும்.முடிச்சுகள் இட்டபின் இயற்கை சாயத்தில் நிறமேற்றுகிறோம்.
கடுக்காய், விரலிமஞ்சள், பீட்ரூட், கேரட், மாதுளை ஓடு, கொய்யா இலை, பாலக் கீரை, கரிசலாங்கன்னி இலைச்சாற்றிலிருந்து சாயம் தயாரிக்கிறோம். வெங்காயத்தோலுக்கு என தனி நிறமுண்டு. மஞ்சள் கலந்து பிரவுன் நிறத்தில் அசத்தலாக இருக்கும். இதை அணியும் போதும் முகரும் போதும் மணமாக இருக்கும்.
ஒவ்வொரு சேலைக்கும் நிறத்தில் சிறிய மாறுபாடு இருக்கும். இதுவே இயற்கை சாயத்திற்கு கிடைக்கும் மரியாதை.பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இயற்கை சாயம் தந்து, கை முடிச்சுகளால் டிசைன்கள் உருவாக்குவதால் பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றார்.தொடர்புக்கு: 94430 34187.
Advertisement