திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் சிக்கிய சொப்னா குற்றம்சாட்டி வருகிறார். நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தியுள்ளார். இதனால், பினராய் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பாக இளைஞர் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி, தலைமைச் செயலகத்திற்கு நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். அப்போது போலீசார் மீது கற்கள், பாட்டில்கள் வீசப்பட்டன. இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதன் பிறகும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.