பெரியாரை சிதைப்பதும், அம்பேத்கரை விழுங்குவதுமே ஆர்எஸ்எஸ் நோக்கம், சனாதனம் குறித்து ஆளுநர் ரவியோடு விவாதிக்க தயார் என விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பேசினார்.
மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மேயர் இந்திராணி பொன்.வசந்த் மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பேசுகையில்,
பெரும்பாலும் இஸ்லாமிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளை தவிர்ப்பதில்லை. எல்லா அமைப்புகளும் என்னை தோழமையோடு அழைப்பதை எண்ணி மகிழ்கிறேன். சமூக நல்லிணக்கம் இக்கால கட்டத்தில் மிக முக்கிய தேவையாக மாறி உள்ளது. மதத்தை வைத்து சமூக நல்லிணத்தை, மக்களை பிரிக்க சிலர் திட்டமிட்டு ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அவர்கள் உணர்ச்சி வயப்பட்டு செய்யவில்லை. நன்றாக சிந்தனை செய்து திட்டமிட்டே அச்செயலை செய்கின்றனர். மக்களை பிரிப்பதை, நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை சீர்தூக்கி பார்த்து அதில் விரும்புவதை அடைய முடியுமா என்பதை என எதிர்பார்த்தே செய்கின்றனர்.
எல்லாவற்றையும் முன்கூட்டியே உணர்ந்து மதிப்பீடு செய்து கணக்கு போட்டு நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சி செய்கின்றனர். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டார்கள் என எண்ணக்கூடாது.
ஆர்எஸ்எஸ் என்பது கற்பிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ஆபத்தான இயக்கம். வெறுப்புணர்வை பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை உள்நோக்கம் கொண்ட இயக்கம். இதையெல்லாம் பயிற்றுவிக்கப்பட்,டு தயாரிக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டவர்கள் தான் மோடியும் அமித்ஷாவும். ஏற்கனவே இதெல்லாம் திட்டமிடப்பட்டது.
எப்படி ஒரு கட்சிக்கு பல்வேறு அணிகள் கிளைப்பிரிவுகள் உள்ளனவோ, ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு பிரிவே பாஜக. கட்சிக்காக கிளை பிரிவுகள் உருவாக்கப்படும் நிலையில், ஆர்எஸ்எஸ்-க்காக உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவுதான் பாஜக.
ஆர்எஸ்எஸ் சிந்திக்கும், திட்டமிடும், பயிற்றுவிக்கும், செயல்திட்டம் தயாரிக்கும், பாஜக மாநில முதல்வர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக இந்திய பாஜக தலைவர்களை தேர்ந்தெடுக்கும். மோடி பேசுகிறார் என்றால் ஆர்எஸ்எஸ் பேசுகிறது என்று அர்த்தம், பாஜக ஆள்கிறது என்றால் ஆர்எஸ்எஸ் ஆள்கிறது என அர்த்தம்.
ஆர்எஸ்எஸ் கொள்கை தான் தீவிர இந்து பற்றாளரான காந்தியை கொன்றது. தற்போது ஜனநாயகத்தை கொல்கிறது. தீவிர இந்துத்துவ சிந்தனை கொண்ட காந்நியடிகளையே ஆர்எஸ்எஸ் கொன்றது. கோட்சே உணர்ச்சி வசப்பட்டு காந்தியை கொல்லவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு மூளை சலவை செய்யப்பட்டு காந்தியை கொல்ல வைக்கப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் போலவே சிந்திக்ககூடிய சங்கபரிவார்கள் தான் நாட்டில் உள்ள இந்து அமைப்புகள். அதுவே இந்துத்துவாவின் குடும்ப அமைப்புகள் போல செயல்படுகின்றன. பஜ்ரங்தள், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட 10 அமைப்புகள் ஆர்எஸ்எஸ் இன் கொள்கையை பரப்பும் வேலையை செய்கின்றன.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் 13ஆயிரம் பேர் திருமணம் செய்து கொள்ளாமல் வேலை செய்து கொண்டுள்ளனர். இந்த இயக்கத்திற்கு முழுமையாக தங்களை ஒப்படைத்து வேலை செய்து வருகின்றனர். நாட்டில் நகரத்தில் முக்கியமானவர்களை சந்தித்து மூளைச்சலவை செய்து தங்களுக்கான பணியை செய்து வருகின்றனர்.
சாதி மத உணர்வு நிறைந்தவர்களை, மருத்துவர்கள், ஆட்சியர்கள், அதிகாரிகள், ஆகியோரை சந்தித்து மூளைச்சலவை செய்கின்றனர். அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சந்தித்து மூளைச்சலவை செய்து ஆர்எஸ்எஸ் ஆளாக்குகின்றனர்.
நாடு விடுதலை அடைந்தபோது இந்துவும் மூஸ்லீமும் ஒற்றுமையாக இருங்கள் என சொன்னபோது ஆர்எஸ்எஸ்-க்கும் காந்திக்கும் முரண்பாடு ஏற்படுகிறது. பாகிஸ்தான் பிரியும் போது இந்து மூஸ்லீம் இடையே வன்முறை, உயிர்ப்பலி ஏற்பட்டது. மனிதாபிமானம் கொண்ட காந்தி இந்து மூஸ்லீம் பிரிவினை, சண்டை வேண்டாம். கலவரம் பிரச்னை வேண்டாம் என காந்தி சொன்னபோது ஆர்எஸ்எஸ்-க்கு அது பிடிக்கவில்லை.
மூஸ்லீம்களுக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக முடிவு எடுக்கிறாரே என ராமபக்தரான, இந்துவான காந்தியையே சுட்டுக்கொன்ற இயக்கம் தான் ஆர்எஸ்எஸ். இஸ்லாமிய சமூகம் காந்திக்கு தான் நன்றிக்கடன் பட்டவர்கள். மூஸ்லீம் ஆதரவு கருத்து சொன்னார் என்பதற்காக தான் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
வல்லபாய் பட்டேலை உயர்த்துவது அவர்களிள் நோக்கமல்ல. காந்தியை சிறுமைப்படுத்தவே பட்டேலை உயர்த்தி பிடித்தார்கள். பட்டேல் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தவர். அதற்கு எதிராக இருந்தவர். பட்டேல் சமூக வாக்கு வங்கிக்காகவும், காந்தியை ஓரங்கட்ட வேண்டும் என பட்டேலை தூக்கி பிடித்தனர்.
காந்தியடிகளின் இடத்தில் வீர சவார்க்கர் மற்றும் கோட்சேவை போற்ற விரும்புகிறார்கள். வீர சவார்க்கர் என சொல்லும் போதே கூச்சமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டீஸ்க்கு எழுதி விடுதலையானவர். அரசாங்க மதமாக இந்து மதம், நாட்டை பெருபான்மை இந்துக்கள் ஆள வேண்டும் எந்த மதமும் நாட்டில் வலிமை பெற்றுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் நோக்கம்.
ஆப்கானிஸ்தான், மியான்மர், சீனா வரை இந்தியா இருந்தது என பேசுகிறார்கள். அகண்ட பாரதம் அமைப்பதே ஆர்எஸ்எஸ் நோக்கம். இந்த நாடு மன்னர்களால் அல்ல ரிஷிகளால், முனிவர்களின் தவத்தால் உருவாக்கப்பட்ட தேசம் இந்தியா என ஆளுநர் ரவி பேசுகிறார். சனாதனம் தான் பாரதத்தின் ஆன்மா என பேசுகிறார்.
சனாதனம் என்றால் நிலையானது, மாறாதது தொடக்கம் முடிவு இல்லாதது. சனாதனத்தின் உள்ளடக்கம் பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு உண்டு என்பதை சொல்வதே. சனாதன தர்மப்படி பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள்.
இதனை ஆளுநர் மறுக்க முடியுமா. ஆளுநர் ரவியே வரட்டும் இது குறித்து விவாதிப்போம். அவர் ஆர்.என் ரவியல்ல. ஆர்எஸ்எஸ் ரவி. பார்ப்பனர்களே ஒருவொருக்கொருவர் சமம் இல்லை. இது தான் சனாதன தர்மம்.
நுபுர் சர்மாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அமித்ஷா கடிதம் எழுதியதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. நுபுர் சர்மாவும், அஜய் குப்தாவும் ஆர்எஸ்எஸ் இயக்க அடையாளங்கள் அதனால் பாதுகாப்பு கொடுங்கள் என அமித்ஷா கடிதம் எழுதியதாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.
ஒவ்வொரு தேசமும் இந்து தேசம், பௌத்த தேசம், இஸ்லாமிய தேசம் என சொல்லும்போது, இந்தியா இந்து தேசம் என்கிற லாஜிக்படி பார்த்தால் அது சரி. ஆனால் இந்த தேசத்தில் இந்துக்கள் என்று இதுவரை யாரும் வரையரை செய்யவில்லை. முஸ்லீம், கிறிஸ்தவர்கள் தவிர்த்து மற்ற நபர்கள் அனைவரும் இந்துக்கள் என சொல்கிறார்கள்.
இஸ்லாம்-க்கு நபிகள், கிறிஸ்தவத்திற்கு இயேசு, ஆனால் இந்துத்துவத்தை தோற்றுவித்தவர் யார் என்றே தெரியாது. தமிழகத்தில் சைவ வைணவ திருவிழாக்கள் தனித்தனியாக தான் நடந்தது. ஹரி, சிவன் என சண்டை வந்ததால் தான் ஹரியும் சிவனும் ஒன்னு அரியாதவன் வாயில் மண்ணு என உருவானது.
ஆதீனங்கள் எதற்கு உருவானது என்றால் வைணவம் சைவத்தை விழுங்கி விடும் என்பதற்காகவும் சைவத்தை காப்பாற்றத்தான் உருவானது. மதமாற்றம் என்பது சைவத்திற்கும் வைணவத்திற்குள்ளும் தான் நடந்தது. ராமயணமே சைவ வைணவ சண்டையை தான் குறிக்கிறது. ராமனுக்கும் ராவணனுக்கும் சண்டை என்றால் சைவத்திற்கும் வைணவத்திற்கும் சண்டை என்று தான் அர்த்தம். சைவ வைணவ யுத்த வரலாறாகத்தான் ராமாயணம் உருவானது.
இந்து என்பதே 150-200 வருடங்களுக்கு உள்ளாகத்தான் உருவானது. வேதிக் மதம் என்பதே பார்ப்பனர்கள் மதம். இந்து மதம் இல்லை. ஆரியர்களுக்குள்ளேயே உருவான வர்ணப்பிரிவினை தான் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை தவிர்த்த மற்ற அனைவரும் திராவிடர்கள். இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். இதைத்தான் அம்பேத்காரும் சொல்கிறார்.
பெரியாருக்கு முன்பே அயோத்திதாச பண்டிதர் திராவிடர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். நாகர்கள் தான் திராவிடர்கள் என அழைக்கப்பட்டனர். நாகலாந்து முதல் நாகர்கோவில், இந்தியாவின் மத்திய பகுதியான நாகபுரி என வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். ஆதிசங்கரருக்கு ஞானம் வந்ததே புலையன் எழுப்பிய கேள்வியால் தான். சமஸ்கிருதத்திடம் இருந்து தமிழை காக்கவும், வைணவத்திடம் இருந்து சைவத்தை காக்கவும் ஆதீனங்கள் தோன்றிய நிலையில், அவர்கள் ஆர்எஸ்எஸ் உடன் கை கோர்த்துவிட்டனர். ஆர்எஸ்எஸ் சதித்திட்டம் புரியாமல் அவர்களுடன் இணைந்துள்ளனர்.
பெரும்பான்மை இந்துக்கள் வாக்கு மட்டும் போதும் என்ற நோக்கத்தில் பாஜக ஆர்எஸ்எஸ் செயல்படுகின்றன. இந்துக்களில் சாதி உணர்வை வளர்த்தால் தான் மத உணர்வை தூண்ட முடியும் என்றே இதனை திட்டமிட்டு செய்கிறனர். நீ வேறு அவன் வேறு என பேசி இந்துக்களை சாதிகளாக உடைக்கின்றனர்.
இன்னொரு முறை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை யாரும் தடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு சனாதனத்தை அரசமைப்பு சட்டமாக வைக்க தயங்க மாட்டார்கள். எதையும் செய்வோம். எதிர்த்து கேட்க யாரும் இல்லை என்ற துணிவோடு மோடி அமித்ஷா செய்கின்றனர்.
முஸ்லீம்களை தவிர யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ளுவோம் என எந்த துணிவோடு பேசுகின்றனர். ஆர்எஸ்எஸ்-க்கு நேர்த்தியான பயிற்சி கொடுக்கவே அக்னிபத் திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. அக்னிபத் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்தவர்கள் விடுத்து மிச்ச நபர்களை ஆர்எஸ்எஸ் நபர்களாக ஆக்கப்படுவார்கள்.
மொழி இன பிராந்திய உணர்வு இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். பன்மைத்துவம் நிறைந்த தேசம் இது. விடுதலை போராட்டத்தில் பங்கேற்காத ஆர்எஸ்எஸ் இயக்கம் நாட்டை குட்டிச்சுவராக்கும் வேலையை செய்கிறது. ஒரே மதம் ஒரே மொழி என இலங்கை செய்த செயலால் அந்நாடு தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.
ஹிட்லர் முசோலினி போல சர்வாதிகார இந்தியாவை ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என மாற்ற முயற்சி செய்கின்றனர். இந்து மதத்திற்குள் பல சாதி இருக்கலாம் எனவும், இந்தியாவில் பல மதங்கள் இருக்கக்கூடாது என பேசுகின்றனர். எந்த வேலையும் செய்யாமல் தின்று கொழுப்போம் என இருப்பதே சனாதனம். இதை எந்த சத்திரியனும் கேட்பது இல்லை.
சனாதனம் பெண்ணை ஒதுக்குகிறது. பார்ப்பனப் பெண்களையே பார்ப்பனர்கள் அடிமைகளாக நடத்தும் நிலை உள்ளது. பார்ப்பப் பெண் விதைவையானால் மொட்டை அடித்து, வெள்ளை சேலை கட்ட வைத்து அட்டூழியம் செய்ய வைக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து குரல் எழுப்பியவர்கள் தான் அம்பேத்கரும், பெரியாரும். ஆர்எஸ்எஸ் நோக்கம் பெரியாரை சிதைப்பதும், அம்பேத்கரை விழுங்குவதுமே ஆகும்.
நாட்டில் அம்பேத்கரை ஏற்ற 30 கோடி தலித் மக்கள் உள்ளனர். எங்கே அம்பேத்கரை ஒதுக்கினால் தலித் மக்களிடம் உள்ள இந்து மதம் சுருங்கிவிடுமோ என அவர்கள் இதை செய்ய தயங்குகின்றன். அம்பேத்கரியம் பெரியாரியம் மார்க்சியம் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM