சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டுவர வேண்டும் என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அதேநேரத்தில் மூத்த தலைவர்களின் சமரசத்தை ஏற்க ஓ,பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார். இந்நிலையில், திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 6-வதுநாளாக நேற்றும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கட்சியின் மூத்த தலைவர்களான தம்பிதுரை, கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ஆகியோர் நேற்று காலை பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து மூவரும் ஓபிஎஸ் இல்லத்துக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் தெரிவித்த தகவல்களுடன் மீண்டும் இபிஎஸ்ஸிடம் சென்று ஆலோசனை நடத்தினர். ஓபிஎஸ்ஸை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்பதில் மூத்த தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ்ஸிடம் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சி மற்றும் தொண்டர்கள் நலன்கருதி தொடக்கத்தில் இருந்தே முதல்வர் பதவி, கட்சியில் முழு அதிகாரம், முதல்வர் வேட்பாளர்,எதிர்க்கட்சித் தலைவர் என எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துகொண்டே இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுக்க வாய்ப்பே இல்லை என்றும் மூத்த தலைவர்களிடம் ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை: அதே நேரத்தில், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி, கட்சியைதனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் இபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளது. அதுதொடர்பாக யாராவது வழக்கு தொடர்ந்தால், அதை துணிச்சலுடன் எதிர்கொள்வது எனவும் இபிஎஸ் தரப்பு முடிவெடுத்துள்ளது. இதற்காக கட்சி வழக்கறிஞர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டைவெளிப்படையாக பொதுவெளியில் அறிவித்து விட்டார். ஆனால், இபிஎஸ் தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இபிஎஸ் ஆதரவாளரான கட்சியின் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் இன்பதுரை, பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கட்சி மற்றும் சட்ட விதிகளில் வழிவகைகள் இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, “ஓபிஎஸ் எப்போதும் சமரசத்தைஏற்றுக்கொள்பவர். ஒற்றைத் தலைமையையும் அவர் ஏற்றுக்கொள்வார். கட்சியின் பெரும்பான்மையோர் ஒற்றைத் தலைமையையே விரும்புகின்றனர்” என்றார். இன்பதுரை மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோரின் கருத்துகள், இபிஎஸ்ஸின் கருத்துகளாகவே பார்க்கப்படுகிறது.
அணிகள் ஆதரவு: இதனிடையே, அதிமுக இளைஞர் அணி, மாணவர் அணி, இளம்பெண்கள் பாசறை உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நேற்று இபிஎஸ் இல்லத்துக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சமரச பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும், மூத்த தலைவர்கள் 14 பேரைக் கொண்ட உயர்நிலைக் குழு அமைத்தல், அவர்கள் வழங்கும் பரிந்துரைகளை மட்டும் செயல்படுத்தும் இரட்டை தலைமை, அந்த 14 பேரையும் மண்டலங்கள் அளவில் இல்லாமல் தமிழகம் முழுவதும் பரவலாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஓபிஎஸ்ஸின் பல்வேறு நிபந்தனைகளை இபிஎஸ் தரப்பு ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், தான் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்பதை ஓபிஎஸ் உணர்ந்துள்ளதாகவும், அதனால் 23-ம் தேதி நடக்கவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ்ஸை நேற்று சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ‘‘ஓபிஎஸ் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. அப்படி நடத்தினால் அது செல்லாது’’ என்றார்.
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இறங்கி வராமல் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதால், 23-ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதேநிலை நீடித்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.