புதுடெல்லி: சீன நிறுவனங்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நாடு முழுவதும் 400 ஆடிட்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பின், சீனாவுடனான வர்த்தம் உள்ளிட்ட உறவை இந்தியா துண்டித்துள்ளது. தொடர்ந்து சீன வணிக நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு பெரும் சரிவை சந்தித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் முடங்கியது. இந்த நிலையில் பணமோசடி, வரிஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கான நிதி சேகரித்தல் போன்ற நோக்கங்களுக்காக செயல்படும் ஷெல் நிறுவனங்களை விதிமுறை மீறி பதிவு செய்தல் மற்றும் உதவிய குற்றசாட்டின் கீழ் பட்டய கணக்காளர்கள், நிறுவன செயலாளர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் பெரும்நகரங்களில் விதிமுறைகளை மீறி சீனாவிற்கு சொந்தமான அல்லது சீன ஷெல் நிறுவனங்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ், 400 ஆடிட்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியாவின் முக்கிய நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான சீனாவிற்கு சொந்தமான அல்லது சீன ஷெல் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆடிட்டர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் உதவியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் நிதிப் புலனாய்வுப் பிரிவுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றன.