வண்டலூர் அருகே காட்டாங்குளத்தூர் பகுதியில், சாலை விரிவாக்கப் பணிக்காக பவானி அம்மன் கோவில் இடிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வண்டலூர் அடுத்த காட்டாங்குளத்தூர் அருகே சதானந்தபுரம் காந்தி ரோடு பகுதியில் பவானி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.
இந்த கோவிலை சாலை விரிவாக்கப் பணிக்காக இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இந்த கோவிலை அகற்றுவதற்காக அதிகாரிகள் சென்றபோது, பொதுமக்கள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன்ர்.
மேலும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனையடுத்து வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோவிலுக்கான மாற்று இடத்தை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தருவதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து கோயிலை அகற்றுவதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, இன்று காலை 7 மணி அளவில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பவானி அம்மன் கோவிலை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இந்த கோவில் இடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.