பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதுதொடர்பில் நேற்று (17) பலாலி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விமான நிலையத்தைப் பார்வையிட்ட பின்னர் இதுதொடர்பில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தச் சேவைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிற்கு மாத்திரமன்றி ஏனைய நாடுகளுக்கும் இந்த விமான நிலையத்திலிருந்து விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இங்கு சுங்கத் தீர்வையற்ற வர்த்தகக் கட்டிடத் தொகுதியும் அமைக்கப்படவுள்ளது. தற்போது இங்கு 100 பயணிகளுக்கும் குறைவான விமானங்களை மாத்திரமே தரையிறக்க முடியும். இதன் காரணமாக விமான ஓடுபாதைகளை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.