வாஷிங்டன்,
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் பல காரணங்களால் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என ஏற்கனவே எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்து இருந்தார். டுவிட்டர் பயனாளர்கள் குறித்த தரவுகள், டுவிட்டரில் போலியாக உள்ள கணக்குகளின் எண்ணிக்கை, விவரங்கள் உள்ளிட்ட தரவுகளை தன்னிடம் டுவிட்டர் நிர்வாகம் தர மறுத்தால் டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மஸ்க்கின் வழக்கறிஞர்கள் மீண்டும் டுவிட்டர் தரப்புக்கு எழுதிய கடிதத்தில், போலி கணக்குகள் குறித்த விவரங்களுக்கான கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் அந்த தகவலை வழங்காமல் டுவிட்டர் நிறுவனம் தனது கடமைகளை “தெளிவான பொருள் மீறலில்” இருப்பதால், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்த எலான் மஸ்க்-கிற்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகக் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு டுவிட்டர் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி ஒப்பந்தத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.