தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 24 கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் 24 கருட சேவை ஒரே இடத்தில் இன்று (19-ம் தேதி) வெகு விமரிசையாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சாவூரில் 24 பெருமாள் கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அதன்படி தஞ்சாவூர் உள்ள வைணவத் திருக்கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயிலில் 88-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு நேற்று (18-ம் தேதி) திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சியும், இன்று கருட சேவை நிகழ்ச்சியும், நாளை நவநீத சேவை நிகழ்ச்சியும், 21-ம் தேதி விடையாற்றி விழாவும் நடைபெறவுள்ளது.

கருட சேவையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் கோயில், மணிகுன்றாப் பெருமாள் கோயில், மேல சிங்கப்பெருமாள் கோயில், வேளூர் வரதராஜர் கோயில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், வரதராஜபெருமாள் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில், மேலவாசல் ரெங்கநாதர் கோயில், விஜய ராமர் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், ஜனார்த்தன பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், கீழ கோதண்டராமர் கோயில், கீழ சிங்கபெருமாள்கோயில், பூலோக கிருஷ்ணர் கோயில், படித்துறை வெங்கடேசப்பெருமாள் கோயில், பஜார் ராமர் கோயில் உள்ளிட்ட 24 கோயில்களிலிருந்து கருடவாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வரிசையாக கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.

அப்போது பக்தர்கள் பெருமாள் சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் 24 பெருமாள் சுவாமியையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் திரண்டனர். கருட சேவையை முன்னிட்டு ஆங்காங்கே தன்னார்வ அமைப்புகள் சார்பில் அன்னதானம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. இதையடுத்து முற்பகல் 12 மணிக்கு பெருமாள் சுவாமிகள் மீண்டும் அந்தந்த கோயிலை அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.