தந்தையர் தினம்: "தோல்வினு தெரிஞ்சா பிரியாணி சமைச்சு விருந்து கொடுப்பார் அப்பா!" – துரை வைகோ பேட்டி

“அப்பாவின் வாழ்க்கையே போராட்டக் களம்தான். இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் எப்படிச் சுழன்றுகொண்டே இருந்தார் என்பது நான் அரசியல்வாதியான பிறகுதான் புரிகிறது. முன்பெல்லாம் அப்பாவை மேம்போக்காகப் பார்ப்பேன். இப்போது, உழைப்பை உணர்ந்து கதறி அழறேன்” என்று அப்பாவின் அருமையை உணர்ந்த மகனாய்ப் பேசுகிறார் துரை வைகோ.

தந்தையர் தினத்தையொட்டி ம.தி.மு.க தலைவர் வைகோ குறித்து, அவரின் மகன் துரை வைகோ விகடனுக்காக மனம் திறந்தார்.

“அப்பா ரொம்பக் கண்டிப்பானவர். தமிழில்தான் பேசவேண்டும். சைக்கிள் ஓட்டக்கூடாது. கிரிக்கெட் விளையாட அனுமதியில்லை. எப்படா வீட்டை விட்டுக் கிளம்புவார்னு இருக்கும். `அப்பா அடுத்த டூர் எப்போ போறார்’னு அம்மாகிட்ட கேட்டுக்கிட்டே இருப்பேன். அப்படியொரு ஸ்ட்ரிக்ட். போராட்டக் களங்களிலேயே இருந்ததால், சிறு வயதிலேயே என்னை ஊட்டியில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார். பின்புதான், சென்னை சின்மயா வித்யாலயா பள்ளியில் சேர்த்துவிட்டார். படித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள் புத்தகத்தில் இந்தி இருந்ததைப் பார்த்துவிட்டார். “ஊரெல்லாம் நான் இந்திக்கு எதிரா பேசிட்டிருக்கேன். என் வீட்டுலேயே இந்தியா?”ன்னு கேட்டு அடுத்த வருடமே மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி பள்ளியில் சேர்த்துவிட்டார்.

வைகோ

மற்றபடி நான் என்ன படிக்கிறேன், என்ன மார்க் வாங்குறேன்னு எதுவுமே தெரியாது. அவ்ளோ பிஸியா இருப்பார். அவர், எங்களுக்காக ஒதுக்கின நேரம் ரொம்பக் குறைவுதான். என் தங்கைகள் இருந்தாலும் பையன்கிறதால என்மேல கொஞ்சம் பாசம் அதிகம். சில வருடங்களுக்கு முன்பு “ஒரு தகப்பனா உனக்கு நிறைய விஷயங்களை செய்யாம விட்டிருக்கேன்”ன்னு சொல்லி வருத்தப்பட்டார். அந்தக் கவலை தொடர்ந்து அவரை வாட்டியுள்ளது.

அரசியலைத் தாண்டி நாங்க வீட்டில் பேசும் விஷயம்னா அது ஸ்போர்ட்ஸ்தான். அவருக்கு ஃபுட் பால், டென்னிஸ்லாம் ரொம்பப் பிடிக்கும். மாரடோனாவோட தீவிர ரசிகர். என் மகன் டென்னிஸில் இந்திய அளவில் பதக்கங்களைக் குவித்துள்ளான். பேரனுக்காக டென்னிஸ் பார்க்க ஆரம்பித்து ரபேல் நடால் ஃபேனாகிவிட்டார். ரபேல் தோற்றால், இவரே தோற்ற மாதிரி சோகமாகிடுவார். ஜெயித்தால் குதூகலிப்பார். இப்போ, ஃபுட்பால் வேர்ல்டு கப் நேர்ல பார்க்கணும்னு விருப்பப்பட்டிருக்கார். அப்பாவுக்குப் பிடிக்காத; புரியாத விளையாட்டு கிரிக்கெட்தான். சமீபத்தில் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்த்தவர் `என்னப்பா இப்படி அடிக்கிறாங்க… எதை வச்சி ஜெயிக்கிறாங்க’ன்னு கேட்டுக்கிட்டே இருந்தார்.”.

vaiko

அப்பாவின் பொடா நாள்களை எப்படிக் கடந்தீர்கள்?

“பொடாவில் அப்பா கைது செய்யப்பட்டபோது நான் சாஃப்ட்வேர் துறையில் இருந்தேன். அப்பா குறித்துப் பலரும் கேட்டபோது `எத்தனை வருடங்கள் சிறையில் இருந்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்’ என்றோம். ஈழத்தமிழர் பிரச்னைக்காக சிறையில் இருந்தார். அது, கொள்கை முடிவு. அவரைப் போலவே நாங்களும் உறுதியுடன் இருந்தோம். வீட்டில் இருக்கும்போதுகூட பலமுறை பார்க்காமல் கடந்திருக்கிறோம். ஆனால், அப்பா சிறையில் இருக்கும்போது வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதிடுவார். அப்படி, அவர் எழுதிய பல கடிதங்களை இப்போது படித்தாலும் நெஞ்சை உருக்கும். சராசரி கைதி எப்படி இருப்பார்களோ அப்படித்தான் சிறை நாள்களைக் கழித்தார். எந்தச் சலுகையையும் அவர் ஏற்கவில்லை. அவர் சாப்பிட்ட அலுமினியத் தட்டு இப்போதும் இருக்கிறது.”

vaiko poda days

அப்பா இலக்கியவாதி. உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா?

“ஐயய்யோ… ஓப்பனா சொல்றேன். அவர் மாதிரி என்னால் பேசவும் முடியாது, படிக்கவும் முடியாது. அதில் நான் ஜீரோ.”

பேரறிவாளனைப் பார்த்ததும் அப்பா எப்படி ரியாக்ட் பண்ணினார்?

“ஒரு நிறைவான சந்திப்பாக இருந்தது. ரெண்டு பேருமே ரொம்ப அன்பா பேசிக்கிட்டாங்க. பேரறிவாளன் சென்றதும் அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார். அவரின் விடுதலைக்கு விதை போட்டது தலைவர் வைகோ. ராம்ஜெத்மலானி ஐயா முதலில் வரமாட்டேன் என்றார். பலமுறை பேசி வரவைத்தவர் அப்பா. நீதிமன்றத்தில் வாதாடுவதற்கான அனைத்துத் தரவுகளையும் கஷ்டப்பட்டு எடுத்துக்கொடுத்தார். ஆனால், இன்று எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.”

ஆரம்பத்தில் அப்பாவின் செயல்களைத் தவறாகப் புரிந்துகொண்டு பின்பு சரி என்று நினைத்த விஷயம்?

“முன்பெல்லாம் `அப்பா ஏன் உணர்ச்சிவசப்படுறார்? ஏன் கோபப்படுறார்?’னு நினைச்சிருக்கேன். பின்பு சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது என்பதை அரசியலுக்கு வந்தபிறகே புரிந்துகொண்டேன். தமிழகம் முழுக்க மக்களைச் சந்திப்பதோடு பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறேன். உணர்ச்சி வசப்படக்கூடாது. கோபப்பட்டுவிடக்கூடாது என்று நினைத்தாலும் நம்மை அறியாமலேயே கோபம் வந்துவிடும். உணர்ச்சிவசப்பட்டுவிடுவோம்.”

durai vaiko

சிறுவயதில் அப்பா அறிமுகப்படுத்திய அரசியல் தலைவர்?

“நான் பார்த்த பெரிய ஆளுமை கலைஞர் ஐயாதான். அப்பா தி.மு.க-வில் இருக்கும்போது ஐந்தாறு தடவையும் ம.தி.மு.க-வில் இருக்கும்போது ரெண்டு மூணு தடவையும் பார்த்திருக்கேன். ஒருமுறை `தம்பி ஏன் மெலிஞ்சு போயிருக்கான்’னு சொல்லி ரொம்ப அக்கறையா நலம் விசாரிச்சார். வி.பி சிங், ஆர். வெங்கட் ராமன், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் என அப்பாவோட நெருங்கிப் பழகிய பல தலைவர்களைப் பார்த்திருக்கேன். ஜார்ஜ் பெர்னாண்டஸ் அப்பா பொடாவில் இருக்கும்போது எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார். ரொம்ப எளிமையான மனிதர். அவர் துணியை அவரே துவைத்துக்கொள்வார்.”

அரசியல்வாதி என்றால் வெற்றி, தோல்வி இருக்கும். அப்பா அதனை எப்படி எதிர்கொண்டார்?

“அப்பாவைத் தோல்விகள் பாதிக்காது. ஆனால், நிர்வாகிகள் மனசு கஷ்டப்படும் என்பது அவருக்குத் தெரியும். வாழ்க்கை முழுக்க அவருக்குத் தோல்விதான். தோற்றால் எல்லோரும் சோகத்தில் இருப்பார்கள். அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர். ரிசல்ட்டு வர்ற அன்னைக்கு தோக்குற மாதிரி இருந்துச்சின்னா வீட்டிலும், தொண்டர்களுக்கும் பிரியாணிதான். 100 பேர், 200 பேரா இருந்தாலும் ரெண்டு ஆடு பிடிங்கப்பான்னு பிரியாணிக்கு உத்தரவிட்டுடுவார்.

‘வெற்றி விழா கொண்டாடுற மாதிரி இப்படிப் பண்றாரே’ன்னு எல்லோரும் ஆச்சர்யப்படுவாங்க. அதோட நிறுத்தமாட்டார். அடுத்த ரெண்டாவது நாளே போராட்டத்துக்குக் கிளம்பிவிடுவார். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் எப்பவும் ஒரேமாதிரிதான் இருப்பார். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.”

அவரிடமிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள விரும்புவது எது?

“பேச்சுத் திறமையை எடுத்துக்கணும்னு ரொம்ப ஆசை. அப்பா போராட்டங்களில் பேசியவை, சாதித்தவை எனப் பல தரவுகள் எடுத்துக்கிட்டிருக்கேன். ரொம்ப பிரமிப்பா இருக்கு. தினந்தினம் வியந்து பார்க்கிறேன்.”

vaiko

துரை வையாபுரி… துரை வைகோ என்று பெயர் மாறியது எப்படி?

“இயக்கத் தோழர்கள் விருப்பத்துக்காகத்தான் இந்தப் பெயர் மாற்றம். யாரும் எதிர்க்கலை. வரவேற்கத்தான் செஞ்சாங்க. அப்பாவும் எதுவும் சொல்லலை. ஆனால், நான் அரசியலுக்கு வந்ததை மட்டும் அவர் விரும்பவில்லை. அவரின் அரசியல் சூழல், உடல்நிலை, இயக்கத் தோழர்களின் விருப்பம் முக்கியமானது. `நீங்க இல்லன்னா இயக்கம் என்னாகுறது? பலர் தியாகம் பண்ணியிருக்கோம். இயக்கத்துக்காகக் கஷ்டப்பட்டிருக்கோம்’ என்றார்கள். இயக்கத்துக்கு ஒரு பாதிப்புன்னா அப்பா சங்கடப்படுவார். அரசியலுக்கு வர எனக்குத் தகுதியிருக்கான்னு இப்போ கேட்டாலும் சுய பரிசோதனை செய்து கிடையாதுன்னுதான் சொல்வேன்.

நான் ஒரு இயற்கை ஆர்வலர். 45 வயதுக்குமேல் தொழிலை விட்டுட்டு உலகம் சுற்றவேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. அரசியலுக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆர்வம் இருந்தால் எந்தக் கஷ்டம் வந்தாலும் ஈஸியாகக் கடப்பார்கள். ஆனால், நிர்பந்தம் செய்து தள்ளப்பட்டால் சின்னக் கஷ்டம்கூட பெரிய கஷ்டமாகிடும். அரசியலில் நானும் அப்படித்தான். பல நாள்கள் தூங்காமல் இருந்துள்ளேன். மனச் சங்கடத்துக்கு ஆளாகியிருக்கேன். ஆனால், தொண்டர்களின் நிபந்தனையற்ற அன்பு நெகிழ வைக்கிறது. இதுவரைக்கும், இப்படியொரு அன்பை அனுபவித்ததில்லை. இதுக்காகவே, நம்ம வாழ்க்கையை மாத்திக்கிறது தவறில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.”

durai

எந்தத் தொடர்பும் இல்லாமல் ஓய்வில் இருக்கும்போது அப்பா எப்படி இருப்பார்?

“அப்படியெல்லாம் சும்மா இருந்திட மாட்டார். நானும் தங்கச்சிங்கள்ளாம் வலுக்கட்டயமா எங்கயாவது கூப்பிட்டுப் போனா, `இன்னைக்கு நாம எதுவும் பண்ணலியே’ன்னு வருத்தமாகிடுவார். அவருக்கு எப்பவும் இயங்கிக்கிட்டே இருக்கணும். தினமும் பரபரப்பான ஓய்வில்லாத வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்.”

நீங்கள் தலைமைக் கழகச் செயலாளரானபோது என்ன அட்வைஸ் கொடுத்தார்?

“கோபம் மட்டும் கூடாது என்றார். ஆனால், இப்போ அவர் எதிர்பார்த்ததைவிட சிறப்பா செயல்படுறேன்னு சந்தோஷப்படுறார்.”

அப்பாகூட படங்களுக்குப் போயிருக்கீங்களா?

“குடும்பப் படங்கள்னா அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும், அண்ணன் தம்பி கதைகள்னா அழுதுடுவார். பாரதிராஜா படங்களையும் ஆங்கிலப் படங்களையும் விரும்பிப் பார்ப்பார். கடைசியா அப்பாகூட தியேட்டரில் ‘அசுரன்’ பார்த்தேன். வெற்றி மாறன் இயக்கத்தையும் தனுஷ் நடிப்பையும் பார்த்து வியந்து பேசினார். என் பொண்ணு ‘டான்’ நல்லாருக்குன்னு சொன்னாள். அப்பாவைக் கண்டிப்பா பார்க்க வச்சிடுவேன்.”

durai vaiko

அப்பாவுக்குக் கொடுக்க நினைக்கும் கிஃப்ட்?

“ம.தி.மு.க-வுக்கு பம்பரச் சின்னம் என்ற அங்கீகாரத்தை வாங்கணும். அப்பாவோட உழைப்புக்கும் தியாகத்துக்கும் தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கணும். நடாலுடன் லஞ்ச் அல்லது சந்திக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரணும். இந்த மூன்றையும் செய்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்.

அப்பா கறுப்புத் துண்டு போட்டிருப்பார். உங்களுக்கு அப்படியான அடையாளம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

“நான் நானாவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய செயல் மட்டும்தான் பேசவேண்டும்.”

vaiko

விகடனுக்காக அப்பாகிட்ட சொல்லாத விஷயம்?

“மூணு மாசம் கழிச்சி சொல்லலாம்னு நினைக்கிறேன். அந்த நிகழ்வு நடக்கும்போது தமிழகத்துக்கே தெரியும். இப்போ சொல்லிட்டா அது சர்ப்ரைஸ் இல்லை. ப்ளீஸ் வெய்ட்.”

நீங்கள் அரசியலுக்கு வந்தபிறகு அவர் சந்தோஷப்பட்ட தருணம்?

“முடிவெடுக்கும்போது பல ஆலோசனை சொல்வேன். அதனால், வந்த நல்ல விளைவுகளைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கார். காரணம் இல்லாமல் எதையும் சொல்லமாட்டேன் என்பதை நம்புகிறார். `தம்பி 10 வருஷத்துக்கு முன்பே வந்திருக்கவேண்டும்’ என்கிறார்கள் தோழர்கள்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.