கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பள்ளியின் வகுப்பறையில் மது அருந்திய தலைமை ஆசிரியர் கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மணலி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சஞ்சய் காந்தி.
இவர் தினந்தோறும் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்பே மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. தலைமை ஆசிரியரின் இந்த ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக பள்ளிக்கு மாணவர்கள் வருவதை தவிர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கிராம மக்கள் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த பள்ளிகளில் பள்ளி தலைமை ஆசிரியர் தானாகவே விருப்ப ஓய்வு பெறுவதாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.