திருச்சியில் எடப்பாடி மாஸ்: வெல்லமண்டி போன் போட்டால் பதறும் நிர்வாகிகள்

அதிமுகவை பிளவுபடுத்த அந்நிய சக்திகள் செயல்படுவதாக கூறிய திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஒருகிணைப்பாளர் பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்பட்டு இருக்கிறார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் 23ம் தேதி பொதுக்குழு கூட உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிடிவாதமாக இருப்பதால், பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்.பி.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கமே உள்ளனர். எனினும் இருதரப்பும் ஆள்பிடிக்கும் படலத்தை துவக்கியுள்ளது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் இரண்டு கோஷ்டியினரும் போஸ்டர், பிளக்ஸ் பேனர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் ஓபிஎஸ் பக்கம் உள்ளார்.
இவர் சொல்வதை தான் தஞ்சையில் உள்ள அதிமுக நிர்வாகிகள் கேட்பார்கள். இதனால், தஞ்சை மாவட்டம் முழுவதும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளது.

அதேநேரம் திருச்சியில் 3 மாவட்டச் செயலாளர்கள் இருக்கின்றனர். திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி ப. குமாரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியும் இருக்கின்றனர்.

இவர்களில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி ஆகியோர் இபிஎஸ் பக்கமும், முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பக்கமும் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சிவபதி, எம்ஜிஆர் இளைஞரணி மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஏக மனதாக எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றிணைந்து செல்வதே அவருக்கு நல்லது எனவும், 4 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கட்டிக்காத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இபிஎஸ் எனவும் புகழாரம் சூட்டி எடப்பாடிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

வெல்லமண்டி நடராஜனை பொருத்தவரையிலும் திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராக இருந்தது முதல் அமைச்சரானதுவரை ஓபிஎஸ் மூலமே கட்சியின் அதிகார வரம்புகளில் பயணித்து வந்திருக்கிறார்.

சமீபத்தில் திருச்சி பெல் தொழிற்சாலை அங்கீகார தேர்தல் தொடர்பான கலந்தாலோசனையில் கூட ஈடுபடவில்லை.

இந்த நிலையில், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி நடராஜன் இப்போது சென்னையில் உள்ளார். அவர் சென்னையில் இருந்தபடியே செல்போனில் தனது மாவட்ட நிர்வாகிகளான பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேசி, ஓபிஎஸ் பக்கம் வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

இதில் பலர், நான் உங்கள் பக்கம் தான்னே, என்று பேசி டிமிக்கி கொடுக்கின்றனர். ஆனால், அவர் பக்கம் செல்லவில்லை. வெல்லமண்டி நடராஜனின் போன் நம்பரை பார்த்தாலே, பலர் போனையே எடுப்பதில்லை என்றும் திருச்சி அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திருச்சியை பொறுத்தவரை முன்னாள் எம்.பி ப குமார், முன்னால் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் உள்ளிட்ட பெரும்பாலானோர் எடப்பாடி கையை பலப்படுத்தி இருக்கின்றனர் என்றே கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.