தி.மு.க-வுடன் மென்மை போக்கை கடைபிடிக்கும் ஒட்டுத் திண்ணை குரூப்: போட்டுத் தாக்கிய திருச்சி குமார்

க.சண்முகவடிவேல், திருச்சி

அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை தேவை என தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியதை அடுத்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

கடந்த 5 நாட்களாகவே இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசியலில் 75 எம்எல்ஏக்களுடன் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.

இரட்டைத் தலைமை இருப்பதால் ஆளும் கட்சி திமுகவுடன் ஒரு தரப்பு மென்மைப் போக்கை கடைபிடிக்கிறது. மறைந்த முதல்வர், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த அம்மா ஜெயலலிதா வழியில் உண்மையாக அதிமுகவுக்கு உழைக்கக் கூடியவர்கள் ஒரு வழியிலும், ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து அதிமுகவின் அழிவுப்பாதைக்கு வழிவகுப்பவர்கள் ஒரு பக்கமும் இருப்பதால் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவியால் பலப்படுத்தப்பட்டு இருக்கும் அதிமுகவில் இரட்டைத் தலைமை கோஷ்டி அரசியல் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கும். ஆகையால் ஒற்றைத் தலைமையே ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்டும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வழிவகுக்கும்.

அதிமுக நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் வலுவிழந்து வருகிறது. கட்சியை புத்துணர்ச்சியோடும், வீறுநடை போட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய அதிமுக இருக்கின்றது. தொண்டர்கள் சோர்வடையும் முன்பு கட்சியை பலப்படுத்த வேண்டும்.

இ.பி.எஸ் திமுக எதிர்ப்பை உறுதியாக இருக்கின்றார். அதிமுகவின் கடைநிலை தொண்டன் வரை ஒற்றைத் தலைமையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறான்.
கடந்த நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வராக செயல்பட்ட ஈபிஎஸ் துணிவோடும், தனித்தன்மையுடனும் ஆட்சியை நடத்தியதோடு மட்டுமல்லாமல் திறம்பட தமிழகத்தில் கட்சியையும் வளர்த்திருக்கிறார். ஆகவேதான், நாங்கள் எடப்பாடியார் தலைமையிலான ஒற்றைத் தலைமை வேண்டும் என விரும்புகின்றோம்.
திருச்சி மாவட்டத்தில் ஒருவர நிர்வாகியாக செயல்பட விண்ணப்பம் கொடுத்தார். அவரை முன்மொழியவும் வழிமொழியவோ ஆட்கள் இல்லை. அதன்பின்னர் முன்மொழிபவர் வழி மொழிபவர்கள் பட்டியல் தலைமைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், தலைமையில் இருந்து யாருக்கு முன்மொழியவும் வழி முடியவும் ஆட்கள் இல்லையோ அவரது பெயர் நிர்வாகிகள் பட்டியலில் வெளிவருகிறது. முன்மொழியப்படாத ஒரு நபர் சென்னையில் யாரையோ பிடித்து பதவி வாங்கி வந்துவிட்டார். அப்படி இருந்தால் மற்ற நிர்வாகிகள் எப்படி செயல்படுவார்கள். தொண்டர்களின் மன நிலை எப்படி இருக்கும்.

அடுத்து நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென்றால் அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையான தலைவர் எடப்பாடியார் தலைமையிலான ஒற்றைத் தலைமையே வேண்டும்” என்று முன்னாள் எம்பியும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப குமார் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாஸ்கர் பாலு, கார்த்தி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.