புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தசூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில், “அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றிய வீரர்களுக்கு மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎப்), அசாம் ரைபிள்ஸ் படைகளில் சேர 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
மேலும், இந்த படைகளில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பில், அக்னி பாதை வீரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும். அக்னி பாதை திட்டத்தின் முதல் அணியினருக்கு மட்டும் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அக்னி பாதை திட்ட வீரர்களுக்கு இந்திய கடலோரக் காவல் படை, பாதுகாப்புத் துறை அலுவலக பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்
மேலும், மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் 16 பொதுத் துறை நிறுவனங்களான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பாரத் எர்த் மூவர்ஸ், பாரத் டைனமிக்ஸ், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ், கோவா ஷிப்யார்டு, இந்துஸ்தான் ஷிப்யார்டு, மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ், மிஸ்ரா தாத்து நிகாம், ஆயுத வாகனங்கள் தயாரிப்பு நிறுவனம் (ஏ.வி.என்.எல்), அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் (ஏ.டபிள்யூ. அண்ட் இ.ஐ.எல்), எம்.ஐ.எல்., ஒய்.ஐ.எல், ஜி.ஐ.எல், ஐ.ஓ.எல், டி.சி.எல். ஆகியவற்றில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
தேவைக்கேற்ப வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்படும். இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் துறையில் வாய்ப்பு
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் நேற்று கூறும்போது, “அக்னி பாதை திட்டத்தில் கடற்படையில் பணியாற்றும் வீரர்களுக்கு கப்பல் துறை சார்பில் 6 பிரிவுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன்மூலம் உலகம் முழுவதும் கப்பல் துறையின் பல்வேறு பணிகளில் அக்னி பாதை திட்ட வீரர்கள் சேர முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியதாவது: அக்னிபாதை வீரர்களுக்கு 10 சதவீதஇடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அக்னி பாதை வீரர்களுக்காக மேலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய திட்டத்தில் விமானப் படையில் சேரும் வீரர்கள், நிரந்தரப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அவர்கள் நிரந்தரப் பணியில் சேரும்போது ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டால், அவர்கள் உயர் கல்வியைத் தொடரலாம். புதிதாக தொழில் தொடங்கலாம். மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் சேர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.