அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், இரட்டைத் தலைமையே தொடரட்டும் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜூன் 23-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர். அதேபோல எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அவரை நேரில் சென்று சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இத்தகையைச் சூழலில், ஓ.பி.எஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலேயே அவருக்கு எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. தேனி மாவட்ட அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். இதில் கம்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க-வின் கழக அமைப்புச் செயலாளருமான ஜக்கையன், தேனி மாவட்ட அ.தி.மு.க பொருளாளர் சோலைராஜ், தேனி மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் செந்தட்டிகாளை, தேனி நகரச் செயலாளர் கிருஷ்ண குமார், பெரியகுளம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ், கம்பம் ஒன்றிய முன்னாள் செயலாளர் இளையநம்பி, பெரியகுளம் ஒன்றிய துணைச்செயலாளர் வைகைபாண்டி, ஆண்டிபட்டி-பேரூர் கழக துணைச் செயலாளர் பொன் முருகன் ஆகியோர் சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இது ஓ.பி.எஸ் தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஓ.பி.எஸ் சொந்த மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு அளிக்காமல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான் தலைமையில் இன்று பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பி.எஸ் பண்ணைவீட்டில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்… மூன்று முறை முதல்வராகவும், அமைச்சரவையில் பல முக்கிய துறைகளை கவனித்தவருமான ஓ.பி.எஸ்-க்கு அ.தி.மு.க-வில் ஆதரவாளர்கள் அதிகம் எனக்கருதப்பட்டது. ஆனால் கடந்த முறை முதல்வராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆட்சி நடத்திய இ.பி.எஸ் பின்னே பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களும், மாவட்டச் செயலாளர்களும் உள்ளனர். இதனால் ஒற்றைத் தலைமைக்கு அவரே வருவார்..!” எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ஓ.பி.எஸ் சொந்த ஊரைச் சேர்ந்த நிர்வாகிகள் இ.பி.எஸ்-ஐ சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.