புனே: இந்திய ரயில்வேயின் ஒரு அங்கமாக செயல்படும் ஐஆர்சிடிசி., ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. தொலை தூர ரயில்களில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டு உள்ள ரயில் பெட்டிகளில் சமையல் கூடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதே சுடச்சுட உணவு தயாரிக்கப்பட்டு, பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த சமையல் செய்வதற்கு காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் இது வெடித்து தீ விபத்து ஏற்படுகிறது. இதனால், ஓடும் ரயில்களில் சமையல் செய்வதை ஐஆர்சிடிசி கடந்த வாரம் முதல் நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புனே ரயில் நிலையத்தில் உள்ள ஐஆர்சிடிசி.யின் சமையல் அறை இருப்பதாகவும் அங்கு உணவுகள் சமைக்கப்பட்டு காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளைக்கும் 15 நீண்ட தூர ரயில்களுக்கு உணவு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர். சுடச்சுட வழங்காமல் ஆறிய உணவு வழங்கப்படுவதால் நீண்ட தூர ரயில் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்சார அடுப்பு வரும் 22ம் தேதி மும்பை-புனே இடையே இயக்கப்படும் டெக்கான் குயின் ரயிலில் புதிய ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் மின்சார அடுப்பு வசதி உள்ளதால், சுடச்சுட உணவு சமைக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது.