நான் தவறாக பேசவில்லை, எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது: சாய்பல்லவி

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவரும் சாய்பல்லவி, தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்திருக்கும் விராட பருவம் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், இங்கு மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி தாக்குதல் நடத்தியதும் ஒன்றுதான். மதத்தின் பெயரால் எந்த ஒரு மனித உயிரும் போகக் கூடாது, யாரும் துன்புறுத்தக் கூடாது என்று பேசியிருந்தார் சாய் பல்லவி. அவருடைய இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது. பல்வேறு அமைப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை ரம்யா, சாய் பல்லவியின் கருத்தை வரவேற்ற நிலையில், பா.ஜ.,வில் உள்ள நடிகை விஜயசாந்தி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இப்படி ஆதரவு, எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில், தற்போது சாய்பல்லவி தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து தனது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில், ‛நான் இடதுசாரியும் இல்லை, வலது சாரியும் இல்லை. நடுநிலையாக இருக்கிறேன். விராட பருவம் புரமோஷன் நிகழ்ச்சியில் நான் தவறாக எதுவும் பேசவில்லை. ஆனால் எனது பேச்சை தவறாக புரிந்து கொண்டார்கள். எந்த ஒரு உயிரும் மதம், இனம், மொழி, சாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என்றுதான் நான் பேசி இருந்தேன். ஆனால் அது தவறாக சித்தரிக்கப்பட்டு சர்ச்சை ஆக்கப்பட்டது. இது என்னை வேதனைப்படுத்தி உள்ளது. இதுபோன்ற நேரத்தில் எனக்கு பலரும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று சாய்பல்லவி அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.