லாகோஸ்,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எலிகளால் பரவ கூடிய லாசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி நைஜீரிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாடு முழுவதும் அரசு தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், நடப்பு ஆண்டில் லாசா காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
ஆண்டு தொடக்கத்தில் இருந்து, 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, 4,939 பேருக்கு பாதிப்பு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு ஜூன் வரையில் நாட்டில் பதிவான 155 என்ற உயிரிழப்பு எண்ணிக்கையானது 19.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 20.2 சதவீதம் ஆக இருந்தது.
24 மாநிலங்களில் குறைந்தது ஒருவருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஓண்டோ, இடோ மற்றும் பாச்சி ஆகிய 3 மாநிலங்களின் உறுதியான தொற்று அளவு மொத்தத்தில் 68 சதவீதம் என்ற அளவிலுள்ளது.
லாசா என்ற ஒரு வகை வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனால் ரத்த இழப்பு ஏற்படும். வீட்டின் உணவு அல்லது பொருட்களின் மீது மேஸ்டோமிஸ் என்ற ஒரு வகை எலிகளின் கழிவுகள் கலக்கும்போது, மனிதர்களுக்கு தொற்று பரவுகிறது.
லாசா காய்ச்சல் ஆனது சில சமயங்களில் மலேரியாவை ஒத்த அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஒன்று முதல் 3 வாரங்கள் வரை அறிகுறிகள் இருக்கும். லேசான அறிகுறிகளாக காய்ச்சல், மயக்கம், பலவீனம் அடைதல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.