சென்னை: முப்படைக்கு ஆள்சேர்க்கும் ‘அக்னி பாதை’ திட்டத்தை எதிர்த்து, சென்னையில் இளைஞர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
மத்திய அரசு அறிவித்த ‘அக்னி பாதை’ திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வட மாநிலங்களில் ரயிலுக்கு தீ வைத்தல், சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்துவது என வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இந்நிலையில், ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவை, மதுரை, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னம் அருகே திடீரென திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் அப்பகுதியில், பாதுகாப்பை பலப்படுத்தினர். பின்னர், சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழைய முறை தொடர வேண்டும்
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறும்போது, ‘‘கடந்த 2019-ல் உடல்தகுதி தேர்வான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ‘அக்னி பாதை’ திட்டத்தை அமல்படுத்தக் கூடாது.பழைய முறையிலேயே ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடத்த வேண்டும்’’ என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கலைந்து செல்லும்படி போலீஸார் தெரிவித்தனர். எனினும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதையடுத்து, போலீஸார் அவர்களைக் கைது செய்து, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினர்.
பின்னர், கைது செய்யப்பட்டவர்கள், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தங்கவைக்கப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக, போர் நினைவுச் சின்னம் அருகே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் போராட்டம் ஏதும் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.