வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக டில்லியில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. இதனிடையே, வேலைவாய்ப்பு குறித்து தவறான நம்பிக்கையை பிரதமர் கொடுத்துவிட்டு இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டம் என்ற அக்னிபாதையில் நடக்க விடுவதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு அறிவித்த ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. பீஹார், உ.பி.,யில் ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதில், பல அச்சுறுத்தல் உள்ளதாக கூறிய அக்கட்சி திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில், டில்லியின் ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் அமைதி வழியில் சத்யாகிரக போராட்டம் நடந்து வருகிறது. இதில்,பிரியங்கா மற்றும் அக்கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வேலைவாய்ப்பு குறித்து திரும்ப திரும்ப தவறான நம்பிக்கையை பிரதமர் கொடுத்துவிட்டு, இப்போது, இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டம் என்ற அக்னிபாதையில் நடக்க விடுகிறார். இந்த 8 வருடத்தில் 16 கோடி வேலைகள் கொடுக்கப் படுவதற்கு பதில் பக்கோடா சுடுவது எப்படி என்ற அறிவுரைதான் கொடுக்கப்பட்டு உள்ளது. நாட்டின் இந்த நிலைக்கு பிரதமரே முழு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இன்று(ஜூன் 19) ராகுலுக்கு 52வது பிறந்த நாள். அதனை தொண்டர்கள் யாரும் கொண்டாடக்கூடாது எனக்கூறியுள்ள ராகுல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் துணை நிற்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
Advertisement