பாரிஸ்,-ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பார்லிமென்டுக்கு நடக்கும் தேர்தலில், அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் பதவிக்கு கடந்த ஏப்.,ல் நடந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் வென்றார். தற்போது பார்லிமென்ட்டின் தேசிய அசெம்பிளிக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதில், இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது.பார்லிமென்டில் மொத்தமுள்ள, 577 இடங்களில், பெரும்பான்மைக்கு, 289 இடங்கள் தேவை. இந்நிலையில், மேக்ரோனின் கூட்டணியான, ‘என்செம்பிள்’ அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாலும், பெரும்பான்மை கிடைப்பது கடினம் என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் கடைசியாக நடந்த கருத்துக் கணிப்பில், இக்கூட்டணிக்கு, 255 முதல் 305 இடங்கள் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள், கிரீன் கட்சி ஆகியவை இணைந்து, ‘நியூப்ஸ்’ என்ற புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இது கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டணிக்கு 140 முதல் 200 இடங்கள் வரை கிடைக்கலாம் என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.வரிகளை குறைப்பது உள்ளிட்ட பல திட்டங்களை மேக்ரோன் அறிவித்துள்ளார். பார்லிமென்டில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இவற்றை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் தயவை அவர் நாட வேண்டியிருக்கும்.
Advertisement