ரஷ்ய ஜனாதிபதி புடினின் கட்டளையை ஏற்று பிரித்தானியாவில் 50 உளவாளிகள் ஊடுருவியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த உளவாளிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் சைபர் தாக்குதல்களை நடத்த தயாராக இருக்கும்படி இரகசிய உளவாளிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவுறுத்தியதாக MI5 சந்தேகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரேனிய ஆதாரவாளர்கள் மற்றும் ரஷ்ய எதிர்ப்பாளர்களை குறிவைத்து இராணுவத் தகவல்களைத் திருடவும் அந்த உளவாளிகள் முயற்சிப்பார்கள் என்று பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
மேலும், தலைசிறந்த பாடசாலைகள் மற்றும் அரசுத்துறை உட்பட பிரித்தானிய சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷ்ய உளவாளிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அரசுத்துறையில் ஊடுருவியுள்ள ரஷ்ய உளவாளிகள், தரவுகளை சேகரித்து ரஷ்யாவுக்கு அனுப்பி வைப்பதாக மூத்த உளவுத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய சூழலில், பிரித்தானியாவில் ஊடுருவியுள்ள ரஷ்ய உளவாளிகளின் எண்ணிக்கை தொடர்பில் கணிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் முன்னாள் இராணுவ உளவுத்துறை அதிகாரி Lt Col Philip Ingram.
நாம் பகிரங்கமாக உக்ரைனுக்கு ஆதரவளித்துவருவதால், ரஷ்ய உளவுத்துறை உக்கிரமாக பிரித்தானியாவில் செயல்படும் என குறிப்பிட்டுள்ள அவர், அரசுத்துறையில், பாதுகாப்புத்துறை மற்றும் தொழில்துறையில் அவர்கள் ஆட்களை நுழைத்திருப்பார்கள் என்பது உறுதி என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, நான்கு ரஷ்ய உளவாளிகள் வரையில் வெஸ்ட்மின்ஸ்டரில் செயல்படுகிறார்கள் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று அச்சம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் லண்டனின் கேட்விக் விமான நிலையம் ஊடாக பிரித்தானியாவில் இருந்து ரகசியமாக வெளியேற முயற்சித்த ரஷ்ய உளவாளி ஒருவர் சிக்கினார்.
ஹேமர்ஸ்மித் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது உளவு பார்த்ததாகவும் நாசவேலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவில் ஊடுருவியுள்ளதாக நம்பப்படும் 50 ரஷ்ய உளவாளிகளையும் வேட்டையாடும் பணியில் முக்கிய பிரித்தானிய உளவாளிகள் களமிறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.