புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் வேலூரில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில், இந்த விவகாரத்தில் கொலையை போலீஸ் மூடி மறைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் (51). இவர், தமிழகம் முழுவதும் நிலங்களை வாங்கி அதனை வீட்டுமனையாக பிரித்து விற்பனை செய்யும் சரவணா ரியஸ் எஸ்டேட் குரூப் ஆப் கம்பெனியை நடத்தி வருகிறார். இதில் வேலூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த இடத்தை விலை பேசியவர்கள், பின்னர் அவருக்கு தராததால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இதையடுத்து காட்பாடி விடுதலை சிறுத்தைகள் மாநில பொறுப்பாளர் நீலசந்திரகுமார் அலுவலகத்தில், நேற்றிரவு பேசிகொள்ளலாம் என மாலையே அழைத்து செல்லப்பட்டு, பின்னர் இரவு ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் மர்மமான முறையில், வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்த நிலையில் படிக்கெட்டில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் சந்தேகமரணமாக வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த மர்ம மரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா நேரடியாக விசாரணையை துவங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பணத்தை திருப்பி அளிப்பதாக கூறி சரவணனை அழைத்துள்ளனர். அதனை நம்பி சரவணன் வேலூர் வந்துள்ளார். ஆனால் ஒரு இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு கார் ஓட்டுநரை வேறு எங்கோ அனுப்பி விட்டனர். இரவு முழுவதும் அவரை துன்புறுத்தி கையொப்பம் பெற்றுள்ளனர்.
இது திட்டமிட்ட கொலை. இதில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் நீல சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட்டுள்ளதால், அரசியல் பின்னனி உள்ளதால், இதனை காவல்துறை சரியான கோணத்தில் விசாரிக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் டால்பின் டவர்ஸ் பில்டிங்கில் இறந்துகிடந்தார். இதுகுறித்து நாங்கள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM