அக்னிபாத் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராணுவத்தில் ஒருபோதும் சேர முடியாது என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் ஆட்களை தற்காலிகமாக பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல இடங்களில் ரயில்கள், பேருந்துகள் எரிப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறுகையில், “அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் ராணுவத்தில் சேர முடியாது. ராணுவத்தில் இணைவதற்கு ஒழுக்கம் மிக அவசியம். ரயில் எரிப்பு போன்ற நாச வேலைகளில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை. அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருபவர்கள், தாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என கட்டாயம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பமும் காவல்துறை மூலம் சரிபார்க்கப்பட்ட பிறகே அவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பஸ்வான் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “அக்னிபாத் திட்டம் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்தப் போராட்டங்கள் நமது நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் நிலைப்பாடு கிடையாது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளிடம் தீவிரமாக ஆலோசிக்கப்பட்ட பிறகே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மிகச் சிறப்பான அக்னிபாத் திட்டம் குறித்து இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM