அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவே நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி கே பழனிசாமி உடன் ஆலோசனை மேற்கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், “எடப்பாடி அவர்கள் நான்காண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தி உள்ளார்.
மக்கள் மத்தியில் அவருக்கு அன்பு நிறைந்து உள்ளது. நிச்சயம் அதிமுகவின் ஒற்றை தலைமை வேண்டும். நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் செய்தித்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் கடம்பூர் ராஜு அவர்கள் தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் அதிமுக ஒற்றை தலைமையை எடப்பாடி கே பழனிசாமி ஏற்கவேண்டும் என்று ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
ஒற்றை தலைமை முடிவை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும், அதிமுக இளைஞரணி சார்பில் எடப்பாடி கே பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் சிவபதி தெரிவித்துள்ளார்.
இதேபோல், அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம்: காலத்தின் கட்டாயம் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி அளித்துள்ளார். மேலும், ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.