ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வகை செய்யும் அக்னிபாதை திட்டத்துக்கு மத்திய அரசு விரைவி்ல் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
ராணுவத்துக்கு வழக்கமாக தற்போதுள்ள நடைமுறையின்படி ஆட்களை எடுக்காமல், நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வகை செய்யும் இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக வடமாநில இளைஞர்கள் இத்திட்டத்துக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இளைஞர்களின் முதல் இலக்காக ரயில்களே உள்ளன. பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில், அக்னிபாதைக்கு எதிராக நிகழ்ந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
குறிப்பாக பிகாரில் மட்டும் 60 பெட்டி பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளதுடன் 15 மாவட்டங்களில் ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன என்பது தெரிய வந்துள்ளது.
பீகாரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மேலும் போராட்டக்காரர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.