சீர்காழி அருகே சையது யாசின் மவுலானா தர்ஹா கந்தூரி விழாவில் இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்க வெகு சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை போதனைகளை போதித்து வந்த ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம் இன மக்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர், இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய மார்கத்தைப் பரப்பியவர். இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசலில் 1964-ம் ஆண்டு முக்தி அடைந்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு தர்ஹா அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் யாசின் மெளலானா இறையடி சேர்ந்த தினத்தைக் கந்தூரி விழாவாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற கந்தூரி விழாவில் தஞ்சை, சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், இலங்கை, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் மவுலானவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் நேற்று விமர்சையாக நடைபெற்றது.
சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மவுலான சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வெளிபடுத்தும் விதமாக அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்று வழிபாடு செய்தனர்.