மனிதநேயத்திற்கு பிறகுதான் மத அடையாளம்:சர்ச்சை கருத்துக்கு சாய் பல்லவி விளக்கம்

ஐதராபாத்: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், சாய் பல்லவி. சமீபத்தில் அவர் அளித்திருந்த ஒரு பேட்டி யில், ‘காஷ்மீரில் பண்டிட்கள் கொல்லப்படுவதும், வடநாட்டில் மாட்டிறைச்சியை காரணம் காட்டி முஸ்லிம்கள் கொல்லப்படுவதும் மத வன்முறை’ என்ற கருத்தை சொல்லியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும், ‘காஷ்மீர் தீவிரவாதிகளை, பசு பாதுகாவலர்களுடன் ஒப்பிடுவதா?’ என்று சிலர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் புகார் அளித்தனர். இந்நிலையில், தன்னை எதிர்ப்பவர்களுக்கு சாய் பல்லவி விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் சொன்ன ஒரு கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. சமீபத்தில் நான் அளித்த பேட்டி ஒன்றில், ‘நீங்கள் வலதுசாரி ஆதரவாளரா? இடதுசாரி ஆதரவாளரா?’ என்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் நடுநிலையானவள்’ என்று பதில் சொன்னேன். ‘முதலில் நாம் மனிதநேயம் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். பிறகுதான் நமது அடையாளங்கள் எல்லாம்’ என்று சொன்னேன். எதுவாக இருந்தாலும், ஒடுக்கப்பட்டவர்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அது தவறுதான். எந்த மதத்தின் பெயரில் அது நிகழ்ந்தாலும் அது பெரிய குற்றம்தான். இதுதான் நான் சொல்ல வந்த கருத்தின் சாராம்சம். நிறையபேர் சமூக வலைத்தளங்களில், கும்பல் வன்முறைகள் குறித்து நியாயம் கற்பித்து வருகிறார்கள். ஒருவரை கொல்வதற்கு மற்றவருக்கு எந்த உரிமை யும் இல்லை. நான் மருத்துவம் பயின்றவள் என்ற முறையில், ‘அனைவரது உயிரும் முக்கியமானது. அனைவரின் உயிரும் சமமாக கருதப்பட வேண்டியது’ என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நான் எப்போது பேசினாலும், நடுநிலையை மனதில் கொண்டே என் கருத்தை முன்வைப்பேன். ஆனால், என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முக்கிய பிரபலங்களும், இணையதளங்களும் முழுமையான என் பேட்டியை பார்க்காமல் கருத்து சொல்லியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. எனக்காக குரல் உயர்த்திய உள்ளங்களுக்கு நன்றி. நான் தனியாக இல்லை என்று உணர வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.