தடைக்காலம் முடிந்து 4 நாட்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் பிடித்தும் கிடைத்த குறைந்த மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகளவு மீனவர்கள் உள்ள பகுதி காரைக்கால் மாவட்டம். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து இங்குள்ள 8 மீனவ கிராமங்களைசட சேர்ந்த 25 ஆயிரம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலும், 5 ஆயிரம் பைபர் படகுகளிலும் கடந்த 15 ஆம் தேதி முதல் மீன் பிடித்து வருகின்றனர்.
இவர்களில் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 4 நாட்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் பிடித்துக் கொண்டு இன்று காலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு திரும்பினார்கள். தடைக்காலம் முடிந்த பின்பு அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. கிடைத்த குறைந்த அளவு மீன்களுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை.
காரைக்காலில் இருந்து பல்வேறு தமிழக மாவட்டங்களுக்கு மீன்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஆழ்கடலில் இருந்து பிடித்து வரப்பட்ட மீன்களை அதிகவிலை கொடுத்து வாங்கவில்லை. இதனால் கிடைத்த விலைக்கு மீன்களை விற்றதால் 4 நாட்கள் ஆழ்கடலில் தங்கி செலவு செய்து பிடித்து வந்த மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, தடைக்காலத்தில் லட்சக்கணக்கில் படகுகளை பழுது பார்த்து மீண்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து கடலுக்கு சென்றும் செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM