சென்னை: மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராக காவிரி டெல்டா விவசாயிகள் ஜூன் 22 அன்று கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் (பாலன் இல்லம்) பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் (பாலன் இல்லம்) என்.பெரியசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியுளளதாவது: நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு எதிராகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையிலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என வலியுறுத்தி வரும் கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுமானத்திற்காக 1000கோடி ரூபாய் முதல் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேகதாது அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றையும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் கொடுத்து அனுமதி கோரியுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர்களும் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால்தான் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் மேகதாது அணை கட்டுமான திட்ட அறிக்கையை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் 17ஆம் தேதி நடக்க இருந்த கூட்டத்தில் இதை விவாதப் பொருளாக வைத்தது. தமிழக மக்கள் இதை கண்டித்தும் இதை கைவிட வலியுறுத்தி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுமுறையிட்ட பின்னும் ஒன்றிய அரசு வாய்மூடி மௌனியாக இருக்கிறது.
ஆனால் காவிரி ஆணைய தலைவரோ கூட்டப் பொருளிலிருந்து இதை நீக்க முடியாது என்பதுடன் கூட்டத்தை 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டு காவிரி நதிநீர் ஆய்வு என்ற பெயரில் தமிழகத்திற்கே வந்து மேகதாது அணைக் கட்டிட கர்நாடகம் கொடுத்துள்ள வரைவு அறிக்கையை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றதுடன் எங்களை யாரும் இதில் கட்டுப்படுத்த முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் ஹல்தர் அவர்கள் தெரிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
மூன்று மாநிலங்கள் இதை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடகத்திற்காக மட்டும் ஒரு சார்பாக ஒன்றிய அமைச்சகம் செயல்படுவது என்பது இந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தாது என்பதுடன் அரசு, ஆட்சி, ஜனநாயகம் என்பதெல்லாம் நம்பகத்தன்மை இல்லாமல்போய் விடும். இதை காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. தமிழக அரசு இதில் பொறுப்பான, உறுதியான நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருவதுடன் ஒன்றிய அரசின் அமைச்சரை உடனடியாக நேரில் சென்று சந்தித்து வலியுறுத்திட உள்ளதையும் பாராட்டுகிறோம்.
இந்த நிலையில் ஆணையக் கூட்டத்தில் மேகதாட்டு அணை திட்ட அறிக்கையை விவாதித்திட உள்ள காவிரி ஆணையத் தலைவரை கண்டித்தும் ஒன்றிய அரசு வரும் ஜூன்23 ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் கூட்டப் பொருளிலிருந்து மேகதாது அணை கருத்துருவை நீக்கிட அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் வரும் ஜூன் 22 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஒன்றிய தலைநகரங்களில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரும் அளவில் பங்கேற்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.