கும்பகோணம் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் இடையே அதிகார மோதல் வெடித்துள்ளது. என்னை சீண்டிப் பார்க்கிறார்கள் என மேயரும், மேயரைப் பற்றி என்னாலும் பல விஷயங்களை பேச முடியும் என துணை மேயரும் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. இதில், கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், திமுக கூட்டணியில் உள்ள திமுக- 38, காங்கிரஸ்- 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1 மற்றும் அதிமுக 3, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், 17-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் க.சரவணன் மேயராகவும், 26-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக மாநகரச் செயலாளர் சு.ப.தமிழழகன் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, மாமன்ற கூட்டம் நடைபெறும்போதெல்லாம் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மேயர் சரவணனுக்குப் பதிலாக, துணை மேயர் சு.ப.தமிழழகனே பதிலளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும், மேயர் அறையின் பராமரிப்புப் பணிக்காக வந்த தொகையில், துணை மேயரின் அறையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறி அண்மையில் மாநகராட்சி வாயிலில் நாற்காலியில் அமர்ந்து மேயர் சரவணன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை திமுகவினர் சமாதானப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தால் மேயர்- துணை மேயர் இடையே மன வருத்தம் ஏற்பட்டது. தொடர்ந்து, இனி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு என்னிடம் கேட்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு மேயர் உத்தரவிட்டார். இதனால், இருவருக்குமிடையே இருந்த மனவருத்தம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள், மேயரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அவர்களிடம் பேசிய மேயர், “இதுவரை கூட்டத்துக்கான கையெழுத்து மட்டுமே என்னிடம் வாங்கிச் சென்றீர்கள். இப்போது மேயர் என்றுகூறி கேள்வி கேட்கிறீர்கள். உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமெனில் 2 நாட்களுக்குப் பிறகு கூட்டத்தை நடத்துகிறேன். தொடர்ந்து, இனிவரும் கூட்டங்களிலும் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்” என்றார். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அமைதியாயினர்.
கும்பகோணம் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை திமுக- காங்கிரஸ் நிர்வாகிகள் சமாதானப்படுத்தி வருகின்றனர்.
அதிகாரத்தை காண்பிப்பேன்
இந்த விவகாரம் குறித்து மேயர் க.சரவணன் கூறியது: திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 2 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில் மேயர் பதவியை வழங்கியுள்ளனர். ஆனால், மாநகராட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக என்னை சீண்டிப் பார்க்கின்றனர். ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், என்னிடம் கேள்வி கேட்டு, மனரீதியாக அழுத்தம் கொடுத்தால், நான் அவர்களிடம் கெஞ்சுவேன் என நினைத்தனர். ஆனால், முன்கூட்டியே அவர்களின் திட்டத்தை நான் தெரிந்துகொண்டதால், சுதாரித்துக் கொண்டேன். என்னை சீண்டிவிட்டதால், இனி என்னுடயை அதிகாரத்தைக் காண்பிப்பேன். துணை மேயர் அறைக்கு பல லட்ச ரூபாய் செலவில் மராமத்துப் பணிகள் எந்த நிதியில் மேற்கொள்ளப்பட்டன என ஆணையரிடம் கேட்க உள்ளேன் என்றார்.
மேயரை இயக்கும் நபர்
இதுகுறித்து துணை மேயர் சு.ப.தமிழழகன் கூறியது:
மாமன்ற கூட்டத்தில் எனக்கு கார் மற்றும் தபேதார் வழங்குவது குறித்த தீர்மானத்தை மேயர் ஒதுக்கி வைத்தார். இது குறித்து தெரிந்த உறுப்பினர்கள், மேயரிடம் கேள்வி எழுப்பினர். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. என்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் மேயர் பேசி வருகிறார். அவரைப் பற்றி பல விஷயங்களை என்னாலும் பேச முடியும். நாகரிகம் கருதி அமைதியாக இருக்கிறேன். எனக்கு கட்சியும், கூட்டணியும் முக்கியம். அவரது செயல் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மேயரை வேறு ஒருவர் இயக்கி வருவதாகத் தெரிகிறது என்றார்.
என்னிடம் கேள்வி கேட்டு, மனரீதியாக அழுத்தம் கொடுத்தால், நான் அவர்களிடம் கெஞ்சுவேன் என நினைத்தனர். ஆனால், முன்கூட்டியே அவர்கள்திட்டத்தை நான் தெரிந்து கொண்டதால், சுதாரித்துக் கொண்டேன்