சென்னை: நடப்பு குறுவை சாகுபடியை அதிகரிக்க ரூ.61 கோடி மதிப்பிலான திட்டங்களை வேளாண் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடி பரப்பை 5.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் உயர்த்தும் நோக்கத்தில் ரூ.61 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 31-ம் தேதி அறிவித்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு யூரியா, டிஏபி உரங்கள் தலா ஒரு மூட்டையும், பொட்டாஷ் உரம் அரை மூட்டையும் முழு மானியத்தில் வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ரூ.46 கோடி செலவாகும்.
குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான 2,400 மெட்ரிக் டன் விதைகள் 50% மானியத்தில் விநியோகம் செய்ய ரூ.4.2 கோடியும், 237 வேளாண் இயந்திரங்களை 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.6.61 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறுவையில் நெல்லுக்கு மாற்றாக 22,000 ஏக்கரில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.3.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.