புதுடில்லி: அக்னிபத் திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என அறிவித்துள்ள பாதுகாப்புத்துறை, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ராணுவத்தில் சேர முடியாது என அறிவித்துள்ளது.
அக்னிபத் திட்டம் தொடர்பாக முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் டில்லியில் நிருபர்களை சந்தித்தனர்.
அக்னிபத் திட்டத்திற்கான ராணுவ விவகார துறை கூடுதல் செயல் லெப் ஜெனரல் அனில் புரி கூறியதாவது: அக்னிபத் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சீர்திருத்தம். இந்த சீர்திருத்தம் மூலம் அனுபவத்தையும், இளமையையும் கொண்டு வர முயற்சி செய்தோம். ராணுவத்தில் இரண்டும் சமமாக தேவைப்படுகிறது. அக்னிபத் திட்டம் மூலம் அதிகளவு இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு உள்ளது. அக்னிபத் திட்டம் 1989 முதல் கிடப்பில் உள்ளது. சியாச்சின் உள்ளிட்ட பல பகுதிகளில் பணிபுரியும் வழக்கமான ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் படியே, அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும்.
அக்னிவீரர்கள் பணியின் போது வீரமரணம் அடைந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். பணியில் வேறுபாடு காட்டப்படாது. தகுதியான வயது 17.5 முதல் 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முப்படைகளிலும் ஆண்டுதோறும் 17,600 பேர் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்றனர். ஓய்விற்கு பிறகு என்ன செய்வீர்கள் என அவர்களிடம் யாரும் கேட்பதில்லை. அக்னிவீரர்களுக்கு பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் அறிவித்துள்ள சலுகைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. போராட்டம் காரணமாக அறிவிக்கப்படவில்லை .
அடுத்த 4- 5 ஆண்டுகளில், வீரர்கள் தேர்வு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும். பின்னர் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை உயரும். இந்த திட்டத்தை ஆராயவும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் முதல்கட்டமாக 46 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அக்னிவீரர்கள் தேர்வு 46 ஆயிரத்திலேயே நீடிக்காது. எதிர்காலத்தில் 1.25 லட்சம் பேர் வரை செல்லும்.
அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற முடியாது. ராணுவத்தின் அடித்தளமே ஒழுக்கம். ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம். தீவைப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை. வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர இயலாது. ராணுவத்தில் சேர விரும்பும் ஒவ்வொருவரும் போராட்டம் அல்லது நாசவேலைகளில் ஏதும் ஈடுபடவில்லை என போலீசிடம் சான்று பெற்று தர வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பதாரரின் பின்னணியும் போலீஸ் மூலம் சரிபார்க்கப்படும். வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு ராணுவத்தில் சேர முடியாது. இவ்வாறு அனில் புரி கூறினார்.
இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் எஸ்கே ஜா கூறியதாவது: முதலாவது பேட்ஜ் அக்னிவீரர்கள் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 24 வரை நடக்க உள்ளது. முதல்கட்டமாக ஆன்லைன் தேர்வு துவங்கும். முதல் பேட்ஜ் வீரர்கள் டிசம்பரில் பணியில் சேர்ந்து அம்மாதம் 30 முதல் பயிற்சி துவங்கும் என்றார்.
கடற்படையின் வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறுகையில், இந்த ஆண்டு நவ.,21 முதல் கடற்படை அக்னிவீரர்கள், ஒடிஷாவில் உள்ள ஐஎன்எஸ் சிக்லா கப்பலில் பயிற்சி துவங்கும். இந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடற்படையில் தற்போது 30 பெண் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் கப்பலில் பணியாற்றி வருகின்றனர். அக்னிபத் திட்டம் மூலம் பெண்களும் சேர்க்கப்படுவார்கள். அவர்களும் போர்க்கப்பலில் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement