விண்வெளியில் மோத வரும் கழிவுகள் இந்திய செயற்கைக்கோள்களை காக்க தினமும் போராடும் இஸ்ரோ: 7 ஆண்டுகளில் 70 முறை எஸ்கேப்

புதுடெல்லி:  இந்திய செயற்கைக்கோள்களின் மீது விண்வெளி கழிவுகள் மோதி சேதப்படுத்துவதை தடுக்க, இஸ்ரோ தினமும் போராடி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக இந்தியா சாதனை புரிந்து வருகிறது. விண்வெளியில் இந்தியா ஏவிய ஏராளமான செயற்கைக்கோள் பல்வேறு சுற்று வட்டப்பாதைகளில் சுற்றி வருகின்றன.இந்நிலையில், விண்வெளியில் கைவிடப்பட்ட ராக்கெட் உதிரி பாகங்கள், செயற்கைக்கோள் பாகங்கள்.,  விண்கற்கள் போன்றவை ஆயிரக்கணக்கில் சுற்றி வருகின்றன. இவை செயற்கைக்கோள்களின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் அதிகளவில் உள்ளது. இதுபோன்ற கழிவுகள் மோதி, பல நாடுகளின் செயற்கைக்கோள் ஏற்கனவே  சேதமாகி இருக்கின்றன. இதனால், இந்த விண்வெளி கழிவுகள் இந்திய செயற்கைக்கோள்களின் மீது மோதுவதை  தடுக்க, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தினமும் கண்காணித்து வருகிறது. இதற்கு அதிநவீன தொலைநோக்கிகள், தொலை உணர்வு கருவிகள், ரேடார்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, இதற்காகவே நேத்ரா என்ற திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக, லடாக்கில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொலைநோக்கியின் மூலம், விண்வெளியில் சுற்றி வரும் 40 செமீ அளவுள்ள கழிவுகளையும் துல்லியமாக கண்டு, அவை செயற்கைக்கோள்கள் மீது மோதுவதை  தடுக்க முடியும். தற்போது, இதை விட ஆற்றல் மிகுந்த 2,500 கிமீ வரை பார்க்கக் கூடிய, 10 செமீ அளவு உள்ள விண்வெளி கழிவுகளையும் துல்லியமாக கண்டறியக் கூடிய ரேடாரை, வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில். இந்தாண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூன் 1ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மாதத்துக்கு 2 என்ற வகையில் 10 விண்வெளி மோதல்களை இஸ்ரோ தடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய செயற்கைக்கோள்களை அது காப்பாற்றி உள்ளது.* கடந்த 2015ம் ஆண்டில் இருந்து இதுவரையில் இந்திய செயற்கைக்கோள்களின் மீது விண்வெளி கழிவுகள் மோதுவதை 70 முறை இஸ்ரோ  தடுத்துள்ளது. * 2021, 2022ம் ஆண்டுகளில் மட்டுமே 31 மோதல்களை  தடுக்கப்பட்டு உள்ளன. 2020ம் ஆண்டில் 12, 2019 மற்றும் 2018ம் ஆண்டுகளில் தலா 8, 2016. 2017ம் ஆண்டுகளில் தலா 5 முறையும்,  2015ல் 3 முறையும் தடுக்கப்பட்டு உள்ளது.தடுப்பது எப்படி?விண்வெளி கழிவுகள் செயற்கைக்கோள்கள் மீது மோத வருவதை அதன் திசையை வைத்து  தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ கணிக்கும். பிறகு விண்வெளி கழிவுகள் பயணிக்கும் வேகத்தையும், அதன் திசையையும் கணித்து, அதற்கு ஏற்றாற்போல் செயற்கைக்கோளின் உயரத்தை கீழோ அல்லது மேலோ உயர்த்தும். இதன்மூலம், விண்வெளி கழிவுகளின் மோதல் தவிர்க்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.