வெப் சீரிஸில் நான் பிஸி: பிரசன்னா பளிச்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகவும் வருவேன், மிரட்டல் வில்லனாகவும் அதிரடி காட்டுவேன் என படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் கலக்கி வரும் நடிகர் பிரசன்னா மனம் திறக்கிறார்…
கொரோனாவுக்கு பின் உங்களை காணோமே
பிஸியாக தான் இருக்கேன்… சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து பேசும் 'பிங்கர் டிப்' வெப் சீரிஸில் போலீசாக நடிச்சிருக்கேன். அடுத்தடுத்து வெப் சீரிஸ் நடிச்சிட்டு இருக்கேன்.
உங்கள் திரைப்பயணம் குறித்து சொல்லுங்க
சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆச்சு. நிறைய வெற்றி, தோல்விகளை பார்த்து இந்த துறையில் இருந்தாலும், போகவேண்டிய துாரம் நிறைய இருக்கு. உற்சாகம் கொடுத்த, எனக்கு ஆதரவு கொடுத்த, அனைவருக்கும் நன்றி.
மிஸ் பண்ணிட்டோமேனு நினைத்த கதைகள்
மிஸ் பண்ணிட்டோம்னு நினைப்பதை விட நிறைய கேரக்டர்கள் நமக்கு கிடைத்தால் நல்லா இருக்கும்னு யோசிப்பேன். சினேகாவிடம் புலம்புவதால் என்னுடன் படம் பார்க்க பயப்படுவாங்க. படம் நல்லா இருக்கா, இல்லையா… அதோடு விடுங்க, என சினேகா கூறுவார்.
சமீபத்தில் அப்படி பாதித்த படம் என்ன படம்
பஹத் பாசில் நடித்த 'டிரான்ஸ்' பார்த்தேன்…மனுஷன் சூப்பரா நடிச்சிருக்கார். அந்த ரோல் எனக்கு வந்தால் நல்லாருக்கும். உங்க நடிப்பில் தமிழில் ரீமேக் செய்தால் நல்லா இருக்கும் என நிறைய பேர் சொன்னாங்க.
இப்ப சினிமாவில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கு
நிறைய மாறியிருக்கு… குறும்படம் எடுத்து யூ டியூப்பில் போட்டு கிடைக்கும் வரவேற்பை வைத்து படம் வாய்ப்பு வருகிறது. 10 ஆண்டு போராட்டத்துக்கும், 2 குறும்படம் எடுத்து படம் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஆனால், எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை வருத்தமாக இருக்கு
உங்கள் தயாரிப்பு படத்தில் நீங்கள் நடிப்பீர்களா
என் தயாரிப்பில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் தொடங்க நினைத்தேன். திறமையானவர்களை தேடி வாய்ப்பும் கொடுப்பேன். விரைவில் தயாரிப்பு நிறுவனம் துவங்குவது குறித்து அறிவிப்பு வரும்.
சினேகாவும், நீங்களும் சேர்ந்து நடிக்கும் கதை
கல்யாணத்துக்கு முன் நிறைய கதை வந்தது. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். இப்போ நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பா நடிப்போம்.
ஹீரோயினுடன் நெருங்கி நடிப்பது குறித்து சினேகா
அப்படி ஒரு வாய்ப்பு எந்த இயக்குனரும் கொடுக்கலை. வில்லனா ஆக்கிறாங்க, இல்லை ஜோடியில்லாம பண்ணிடுறாங்க. 'பிங்கர் டிப்'ல கூட இரண்டு ஹீரோயின். ஆனால், எனக்கு ஜோடி இல்லை.