புதுடில்லி,-உளவுத்துறை ஏஜன்ட் எனக் கூறி, வெளிநாட்டினரிடம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த ஈரான் நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்தவர் உசேன் அகமது, ௪௬. கடந்த மாதம் ௨௧ல், மருத்துவ ‘விசா’வில் டில்லிக்கு வந்த இவர், இங்கு லஜ்பத் நகரில் தங்கியிருந்தார். இந்நிலையில், லஜ்பத் நகர் போலீசில், சூடான் நாட்டை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:நானும், என் மனைவியும், மருத்துவ சிகிச்சைக்காக சூடானிலிருந்து டில்லி வந்துஉள்ளோம்.
கடந்த ௧௬ல், கிரேட்டர் கைலாஷில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, நானும், என் மனைவியும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் ஒரு கார் எங்களை மறித்தது. அதிலிருந்து இறங்கிய மூவர், தங்களை உளவுத்துறை ஏஜன்ட்டுகள் எனக் கூறினர். என்னிடம் இருந்த சூட்கேசை வாங்கி அவர்கள் சோதனை செய்தனர். பின், அதை என்னிடம் கொடுத்துவிட்டு, காரில் ஏறி வேகமாக சென்று விட்டனர். சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் நான் வைத்திருந்த ௫௦ ஆயிரம் ரூபாய் ரொக்கம், ௫ லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், சூடான் நாட்டு பணம் ஆகியவற்றை காணாமல் அதிர்ச்சியடைந்தேன். வந்தவர்கள் போலி நபர்கள் என தெரிந்தது. அவர்களை பிடித்து, என் பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.இது பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து, கொள்ளையர்கள் வந்த காரின் பதிவு எண்ணை கண்டறிந்தனர்.அதை வைத்து அந்த கார், நவாப் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தனர். நவாப் மொபைல் எண்ணை வைத்து அவரை போலீசார் தேடிய போது, அவரது உதவியாளராக இருந்த, ஈரான் நாட்டை சேர்ந்த உசேன் அகமது சிக்கினார்.
அவரிடம் விசாரித்த போது, நவாப் மற்றும் வேறு ஒருவருடன் சேர்ந்து, கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். கடந்த ஒரு மாதத்தில், டில்லியில் பல வெளிநாட்டினரிடம் உளவுத்துறை ஏஜன்ட் எனக் கூறி சோதனை செய்து, வெளிநாட்டு பணத்தை கொள்ளை அடித்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். அகமதுவை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.